Sunday, May 18, 2008

ஏமாற்றி திருமணம் செய்ததாக திண்டுக்கல் இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் கைது

திண்டுக்கல் : ஏமாற்றி திருமணம் செய்ததாக மூன்றாவது மனைவி ஆபிதா கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த சங்கிலிபாவாவை, போலீசார் சேலத்தில் கைது செய்தனர். திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் முகமது மதார் என்ற சங்கிலிபாவா (45). மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் இவர், மாந்திரீக வேலையும் செய்து வந்தார். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறேன் என சிலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.




இவரின் முதல் மனைவி ஆயிசா இறந்த பின், திண்டுக்கல்லை விட்டு சென்றவர் ஓராண்டுக்கு முன் மீண்டும் திண்டுக்கல் வந்தார். இதற்கிடையில் கேரளாவில் சிறிது காலமும், தஞ்சாவூர், கோயம்புத்தூர் பகுதியில் சிறிது காலமும் தங்கி மதப் பிரசாரத்திலும், மாந்திரீக வேலையிலும் ஈடுபட்டார். கேரளா, தஞ்சாவூர், கோயம்புத்தூர் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில் இருந்தபோது சாஜிதா என்ற பெண்ணையும், தஞ்சாவூரில் இருந்தபோது வல்லத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் ஆபிதாவையும் மணந்தார். சங்கிலிபாவாவின் உண்மை நிலை தெரிந்தவுடன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆபிதா, திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தவே சங்கிலிபாவா தலைமறைவானார். இவர், சேலத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேலம் சென்று அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த சங்கிலிபாவாவை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.

நன்றி தினமலர்

No comments: