Friday, May 16, 2008

இந்து தலைவர்களை கொல்ல சதி-3 தீவிரவாதிகள் சென்னையில் கைது

இந்து தலைவர்களை கொல்ல சதி-3 தீவிரவாதிகள் கைது
வெள்ளிக்கிழமை, மே 16, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற




சென்னை: சென்னையில் நேற்று கைதான 3 தீவிரவாதிகள் தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து அமைப்புத் தலைவர்களை கொல்வதற்கு திட்டமி்ட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
வட சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட சென்னை இணை கமிஷனர் ரவி தலைமையில் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் மேன்ஷன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மண்ணடி சவரிமுத்து தெருவில் உள்ள அட்வகெட் மேன்ஷன் என்ற விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா அக்ரஹாரம் களையம் புத்தூரைச் சேர்ந்தவர் பழநி உமர் (26). இந்துவாக இருந்து மதம் மாறியவர். நெல்லை டவுன் பகுதியைச் சேர்நதவர் சையத் காசின் என்ற ஹீரா (26). இவர் இறைவன் ஒருவனே என்ற இயக்கத்தின் தென் மாவட்ட தலைவர்.

சென்னை மண்ணடி முத்துமாரியம்மன் தெருவைச் சேர்ந்தவர் காதர் (24). துணிக்கடை நடத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களை வழிநடத்துவது இறைவன் ஒருவனே இயக்கத்தின் தலைவர் அதிராமபட்டினம் தவுபீக் (30). சென்னை கொடுங்கையூரில் 6 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த வழக்கில் கைதானவர். சிறையில் இருந்து வெளியே வந்த இவர் இஸ்லாமிய கொள்கையில் பற்றுடைய இளைஞர்களை மூளை சலவை செய்தார்.

சென்னையில் நாசவேலை செய்ய தவுபீக் சதித் திட்டம் தீட்டினார். அதற்காக அதிராமப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். இறைவன் ஒருவனே அமைப்பின் சென்னை நகர தலைவராக இருக்கிறார் அபுதாகீர் (24) என்பது தெரியவந்தது.

பிடிபட்ட பழநி உமர், சையத் காசிம், மண்ணடி காதர் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
இறைவன் ஒருவனே அமைப்பின் மாநில தலைவர் உத்தரவின்படி சென்னையில் 3 பேரும் பதுங்கியிருந்தோம். இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களை வெடிகுண்டு வைத்து கொலை செய்வதே எங்களின் திட்டம்.

எங்களை போன்ற பல இளைஞர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். வேலையின்றி சுற்றித் திரியும், இஸ்லாமிய பட்டதாரி வாலிபர்களுக்கு இறைவன் ஒருவனே அமைப்பு பணம் தருகிறது. இந்து அமைப்பினர் மற்றும் தலைவர்களால் எங்கள் சமூகம் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். அதற்காக எந்த பயங்கரவாத செயலையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இறைவன் ஒருவனே அமைப்பின் தலைவர் அதிராமபட்டினம் தவுபீக் மற்றும் அபுதாகீர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பு சென்னையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இ-மெயில் மூலம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: