கிறிஸ்துவர்களுக்கு ஒரு நீதி, முஸ்லீம்களுக்கும் ஒரு நீதி, இந்துக்களுக்கே அநீதி
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
திங்கள்கிழமை, அக்டோபர் 13, 2008
சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இரு பிரிவினருக்கும் தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த இடஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்துவ சமுதாய பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்கள்.
அதில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தலா 3.5 சதவிகித உள்ஒதுக்கீடு தந்து சட்டமாக்கி சரித்திரம் படைத்தீர்கள். ஆனால் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும், முன்பு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெற்ற வாய்ப்புகளை விட மிகக்குறைவாகவே இப்போது பெற முடிந்துள்ளது.
எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று முன்பு இருந்தபடி, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலேயே தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, அறிவித்திருப்பதாவது:
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
நல்ல எண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டு, அதே எண்ணத்துடன் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட உத்தரவை நீதிபதி ஜனார்த்தனம் குழு ஆய்வு செய்து அறிக்கை பெற்று தனி இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் 15.9.2007 முதல் அமலுக்கு வந்தது.
கோரிக்கை நிறைவேறியது என்ற மகிழ்ச்சியை கிறிஸ்தவ சமுதாயத்தை பொறுத்தவரையில், முழுமையாக அடைய முடியாமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
எனவே, பின்னடைந்துள்ள முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு மூலம் ஆதாயத்தை அவர்கள் வரவேற்கும் நிலையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மூலம் முன்பு இருந்த வாய்ப்புகள் குறைவதை கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழையபடியே இடஒதுக்கீடு தொடர்ந்திட, அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறது.
அதோடு, சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையை கருதி அவர்களுக்கு மட்டும் இந்த தனி இடஒதுக்கீடு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment