இந்துக்கோவில்களை இடித்து, இந்துக்களது வாழ்வுரிமையை பறிக்கும் மலேசிய அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்த பாஜக மற்றும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு என் நன்றிகள்
மலேசியாவில் இந்துக்களை தாக்கியதை கண்டித்து ஆவேசம்! * லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் கடும் கண்டனம் -நமது டில்லி நிருபர்-
மலேசியாவில் இந்துக்கள் மீது அந்நாட்டு போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் நேற்று எதிரொலித்தது.
தமிழக எம்.பி.,க்கள் ஒரே குரலில் கோஷம் எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். இவர்கள் ஆவேசத்தால் லோக்சபா ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பிரதமரும், வெளியுறவுத் துறையும் உடனடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக எம்.பி.,க்கள் கிருஷ்ணசாமி, கார்வேந்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர், மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரச்னை கிளப்பினர். கார்வேந்தன் பேச, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வாய்ப்பு அளித்தார். கார்வேந்தன் பேசுகையில், `19ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் பலரையும் மலேசியாவுக்கு பிரிட்டிஷார் அழைத்துச் சென்றனர். மலேசியாவில் உள்ள இந்திய சிறுபான்மை சமூக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் தமிழர்கள். இதில், 85 சதவீதம் பேர் தமிழ் பேசும் மக்கள். இவர்கள் கடந்த 25ம் தேதி அன்று தங்களது உரிமைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் பிரிட்டன் ஹை கமிஷன் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அதற்கு முந்தைய நாள் தமிழர் தலைவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பேரணியில், ஆயுதம் தாங்கிய ஐந்தாயிரம் மலேசிய போலீசார், கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து அப்பாவி தமிழ் மக்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் நிறைய பேர் காயமடைந்துள்ளனர். 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய தமிழர்கள் தங்களது எதிர்காலத்திற்காக போராடுகின்றனர். எனவே, மத்திய அரசு தலையிட்டு மலேசிய தமிழர்களை காப்பாற்ற வேண்டும்' என்றார். அப்போது சபையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமைதியாக அமர்ந்திருந்தார். பதில் ஏதும் தரவில்லை. உடன் பா.ஜ., எம்.பி., மல்கோத்ரா, `மலேசியாவில் இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர். பல இந்து கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இது கண்டனத்திற்குரியது' என பேச தொடங்க அவருக்கு ஆதரவாக பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுக்க சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் இப்பிரச்னை கிளப்பப்பட்டது. தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், `மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தாங்கியபடி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த அநீதியை சுட்டிக்காட்டி முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, வெளியுறவு அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். காங்கிரஸ் எம்.பி., நாராயணசாமி பேசுகையில், `தங்கள் உரிமைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மலேசிய போலீசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., டி.ராஜா பேசும்போது, `இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே இருக்கும் நல்லுறவைப் பயன்படுத்தி, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உடனடி தீர்வு காண வேண்டும். இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வெளியுறவு அமைச்சகம் துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க., எம்.பி., மலைச்சாமி பேசும் போது, `எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 64 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், பல இந்து வழிபாட்டு தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கோலாலம்பூரில் உள்ள இந்திய ஹை கமிஷன் அலுவலகம் திறம்பட செயலாற்றவில்லை என தெரிகிறது. தமிழர்கள் தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை: மலேசிய அரசு முடிவு: `இந்துராப்' அமைப்பின் தலைவர்களில் ஒருவரான உதய்குமார், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கை, `வெப்லாக்' என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக மலேசிய அரசு கருதுகிறது. இந்த அறிக்கையின் நம்பிக்கை தன்மை குறித்து ஆய்வு செய்யவும் மலேசிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய அமைச்சர் நாஸ்ரி அசீஸ் கூறியதாவது: `ஒருங்கிணைந்த மலாய் மக்கள் தேசிய அமைப்பு கீழ் செயல்பட்டு வரும் மலேசியா, சிறுபான்மை இந்துக்கள் மீது இன அழிப்பு நடிவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பிரிட்டன் அரசு தலையிட்டு உலக கோர்ட் முன் மலேசியாவை நிறுத்த வேண்டும்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்துக்களை அரசுக்கு எதிராக துாண்டிவிடும் செயலில் உதய்குமார் ஈடுபட்டுள்ளார் என்பதை இந்த அறிக்கை தெளிவாக எடுத்து காட்டுகிறது. `இன அழிப்பு', `இலங்கையில் நடப்பது போல, மலேசியாவில் நடக்கும்' போன்ற வாசகங்கள் பொறுப்பற்றத்தனமானவை. அரசுக்கு சவால் விட வேண்டாம். தனது நடவடிக்கைக்கு உதய்குமார் பொறுப்பேற்க வேண்டும். மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்துக்களை, `ரவுடிகள்' என நான் குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயக நடவடிக்கை கட்சி கூறியுள்ளதை ஏற்க முடியாது. `இந்துராப்' அமைப்பிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆர்ப்பாட்டத்தில் இடம் பெற்ற 20 ஆயிரம் பேர் ரவுடிகள் தான். ஏனெனில் அவர்கள் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். இந்த வார்த்தையை நான் இந்து சமூகத்துக்கு எதிராக சொல்லவில்லை. சட்டவிரோதமான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை பற்றி தான் கூறினேன். மலேசியாவில் 20 லட்சம் இந்துக்கள் உள்ளனர். அவர்கள் அமைதியையும், ஒற்றுமையையும் தான் விரும்புகின்றனர். அவர்களின் உணர்வுகளை இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிரொலிக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் நாஸ்ரி அசீஸ் கூறினார்.
காமன்வெல்த்துக்கு எடுத்து செல்ல மத்திய அரசுக்கு பா.ஜ., கோரிக்கை: மலேசியாவில் தமிழர்கள் துயரப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு அப்பிரச்னையில் தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடியாக மலேசிய சட்ட அமைச்சர் நாஸ்ரி அசீஸ்,` இப்பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டாம். இதை அவர் விட்டு விட வேண்டும். இப்பிரச்னைக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தார். இது இந்தியாவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மல்கோத்ரா கூறுகையில், `மலேசியாவில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறித்த பிரச்னையை காமன்வெல்த் அமைப்புக்கும், ஐ.நா., அமைப்புக்கும் இந்தியா கொண்டு செல்ல வேண்டும். காமன்வெல்த் அமைப்பில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது. மலேசியாவில், பெரும்பான்மை சமூகத்தினர் சிறுபான்மை சமூகத்தினரை துன்புறுத்துவதை அந்த அமைப்பு அனுமதிக்காது' என்றார்.
No comments:
Post a Comment