Wednesday, July 25, 2007

மும்பை குண்டுவெடிப்பு: இன்று மேலும் ஒருவருக்கு தூக்கு



ஜூலை 25, 2007

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மேலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது 2வது கட்டமாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 10 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஏர் இந்தியா அலுவலக கட்டடம், சேனா பவன் (சிவசேனா கட்சி தலைமையகம்) ஆகிய இடங்களில் குண்டு வைத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பரூக் பவாலே என்பவருக்கு இன்று மும்பை தடா நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடே தூக்குத் தண்டனை அறிவித்தார்.

இந்த இரு இடங்களிலும் டைம் பாம் வகை குண்டுகளை வாகனங்களில் வைத்து வெடிக்கச் செய்தார் பவாலே என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. சிவசேனா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா கட்டடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் மாஹிம், மீனவர் காலனியில் கையெறி குண்டுகளை வீசி 3 பேரைக் கொன்ற வழக்கில், ஜாகிர் உசேன், அப்துல் அக்தர் கான், பிரோஸ் அமாணி மாலிக், மொயின் பரிதுல்லா குரேஷி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதுதவிர அல் ஹுசேனி கட்டடத்தில் மோட்டார் பைக்கில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகளை வைத்ததாகவும் இவர்கள் மீது புகார் இருந்தது. நேற்று ஜாகிர் உசேன், அக்தர் கான், பிரோஸ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். குரேஷி மிகவும் இள வயதில் இருப்பதால் அவருக்கு தூக்குத் தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ. 1லட்சம் அபராதமும், குரேஷிக்கு ரூ. 1.65 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 92 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது.

நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 8 பேருக்கு மட்டும் இன்னும் தண்டனை அறிவிக்கப்படாமல் உள்ளது.

நன்றி தட்ஸ்டமில்.காம்

No comments: