Sunday, April 03, 2011

பொன்னர்-சங்கருக்கு அவமதிப்பு: கொமுக-வுக்கு பாடம் புகட்டுங்கள்: எச்.ராஜா

பொன்னர்-சங்கருக்கு அவமதிப்பு: கொமுக-வுக்கு பாடம் புகட்டுங்கள்: எச்.ராஜா

First Published : 01 Apr 2011 12:51:23 PM IST

கோவை, மார்ச் 31: பொன்னர்-சங்கர் திரைப்படத்தில் அவர்கள் உல்லாச வாழ்வு வாழ்ந்ததாக காட்சிகளை அமைத்து அவமானப்படுத்திய கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள கொமுக-வுக்கு கொங்கு மண்டல மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசினார்.
கோவை சிவானந்தா காலனியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் "கள்' இறக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளை திரட்டி, மாநாடு நடத்தி உதயமான கொமுக, கொங்கு மண்டல விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு திமுக-வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது.
÷கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த பொன்னர்-சங்கர் சகோதரர்கள் வாழ்க்கை ஆயிரம் ஆண்டுகள் சரித்திரம் கொண்டது. அவர்களை கடவுள் அவதாரமாகக் கருதி கோயில் கட்டி மக்கள் வழிபடுகின்றனர்.
பொன்னர்-சங்கர் சகோதரர்கள், தாய் சொன்னார் என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்களே தவிர, திருமண வாழ்க்கையை அவர்கள் மேற்கொள்ளவில்லை.
ஆனால், பொன்னர்-சங்கர் சரித்திரத்தை திரைப்படம் எடுப்பதாகக் கூறி, அதில் பொன்னர்-சங்கர் உல்லாச வாழ்வு வாழ்ந்ததாக திரைப்படம் எடுத்திருக்கிறார் கருணாநிதி.
பொன்னர்-சங்கர் சரித்திரத்தை மாற்றி திரைப்படம் எடுத்திருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கொங்கு மண்டல மக்கள் கருணாநிதிக்கும், அவருடன் கூட்டணி வைத்துள்ள கொமுக-வுக்கும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 44 ஆண்டுகளாக மாறி,மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சூறையாடிவிட்டன. 1967-ம் ஆண்டுக்கு முன்பு வரை 1-5ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம், 6-ம் வகுப்பில் இந்தி அல்லது சமஸ்கிருதம்
படிக்கலாம் என்ற நிலை இருந்தது. தமிழ் அழிந்துவிடும் எனக்கூறி திமுக இந்தியை நுழைய விடமாட்டோம் என போராட்டம் நடத்தியதால், தமிழக மக்களால் இந்தி படிக்க முடியாமல் போனது. தன் பேரன், பேத்திகளை இந்தி படிக்க வைத்தவர் கருணாநிதி.
கடந்த 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகள் தமிழ் படிக்காமலேயே உயர் வகுப்புகளுக்குச் சென்று மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை இருக்கிறது. இதன் மூலமாக தமிழ் தெரியாத தமிழ் சமுதாயம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகள் தமிழுக்கு எதிரிகள் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகராமநாதன் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

No comments: