Monday, April 25, 2011

தெய்வீக பாரம்பரியத்தை வைத்து ஆபாச அரசியல் நடத்தும் கருணாநிதி

பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை

கருணாநிதி கதை வசனம் எழுதி வெளிவந்திருக்கும், "பொன்னர் - சங்கர்' படத்திற்கு, சில அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காரணம், கொங்கு மக்கள் குலதெய்வமாக வழிபடும் பொன்னர் - சங்கரின் வரலாற்றை திரித்து, சினிமாவுக்காக, வியாபார நோக்கத்தோடு, ஆபாசமாகவும், கொச்சைப்படுத்தியும் எடுத்திருப்பதாக, புகார் எழுந்துள்ளது.
இக்கதையை நாவலாக, 25 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி எழுதிய போது, அது சம்பந்தப்பட்ட மூல நூல் மற்றும் முக்கிய தகவல்களை கொடுத்து உதவியவர், கவிஞர் சக்திகனல். இவர், இக்கதை ஒரு வார இதழில் தொடர்கதையாக வந்தபோதே, அதன் மூலக்கதையை சிதைத்து மிகைப்படுத்தி, எழுதி விட்டதாக குற்றம் சாட்டினார்.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இக்கதை சினிமாவாக எடுக்கப்பட்டு இருப்பதால், பிரச்னை மீண்டும் வெடித்திருக்கிறது. அவரை சந்தித்தபோது... அண்ணன்மார் சுவாமி கதையைஎப்போது எழுதினீர் கள்?என் படைப்புகளில், அண்ணன்மார் சுவாமி கதையும், தீரன் சின்னமலை காவியமும் முக்கியமானவை. இவை இரண்டும் கொங்கு மக்களின் கலாசாரம் மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தக் கூடியவை.
இதில், அண்ணன்மார் சுவாமி கதையை, என் தந்தை அரும்பாடுபட்டு, ஏட்டுப்பிரதியில் இருந்து குறிப்புகள் எடுத்து எழுதி, கையெழுத்து பிரதியாக வைத்திருந்தார்.நான், மணப்பாறை அருகில் உள்ள தரங்கம்பாடியிலிருந்த, ராஜலிங்க பண்டிதர் என்பவர் வைத்திருந்த ஏடுகளில் இருந்து குறிப்பெடுத்து எழுதி, அவற்றோடு பல தகவல்களை சேர்த்து, 1971ல் புத்தகமாக வெளியிட்டேன். பொன்னர் - சங்கர் கதைக்கு எழுத்து வடிவில் உள்ள மூல நூல் இதுதான்.
பொன்னர் - சங்கர் கதை பற்றி?சுப்புலட்சுமி ஜெகதீசன் என் உறவினர். அவர்தான், கருணாநிதி இக்கதையை விரிவுபடுத்தி நாவலாக எழுத விரும்புவதாக கூறி, அவரிடம் அழைத்துச் சென்றார். பவானி குமாரபாளையம் விருந்தினர் மாளிகையில் சந்தித்து, என் நூலையும், அது சம்பந்தப்பட்ட குறிப்புகள், கோவை வானொலியில் பூளவாடி பொன்னுச்சாமி பாடிய உடுக்கையடி பாடல், "கேசட்' ஆகியவற்றை கொடுத்தேன்.அதை வைத்து, ஒரு வார இதழில், பொன்னர் - சங்கர் தொடர்கதையை, கருணாநிதி எழுதினார். ஆனால், உண்மைக் கதைக்கு மாறாக, கற்பனை கலந்து, மிகைப்படுத்தி எழுதிவிட்டார். அது மட்டுமல்ல, அதை தன் சொந்தக்கதை போல விளம்பரப்படுத்தியும் வருகிறார்.மிகைப்படுத்தி என்றால்... எந்த அளவுக்கு?பொன்னர் - சங்கர் கதை, மன்னர் பாரம்பரிய வரலாற்று காவியம் அல்ல; அது ஒரு நாடோடி இலக்கியம். "குன்றுடையான் கதை' என்றும், அண்ணன்மார் சுவாமி கதை என்றும் அழைக்கப்படும் கர்ண பரம்பரை கதை.கொங்கு வேளாளர் குடும்பத்துக்குள் நடந்த பங்காளிச் சண்டை, காலப்போக்கில் பெரும் பகையாக முற்றி, வேளாள கவுண்டர்களுக்கும், வேட்டுவ கவுண்டர்களுக்கும் இடையில் இனக்கலவரமாக மாறியது. அவர்களுக்குள் நடந்த போரில், பொன்னர் - சங்கர் போராடி உயிர் துறந்தனர்.இதுதான் உண்மைக்கதை. ஆனால், மன்னர் சாம்ராஜ்ய வரலாறு போல கருணாநிதி மிகைப்படுத்தி இருக்கிறார். அதோடு, கொங்கு பண்பாட்டையும், தெய்வ வழிபாட்டையும் திரித்து எழுதியிருந்தார்; அப்போதே, எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்?
எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஓய்வாக இருந்தார். கொங்கு மக்கள் மத்தியில், அப்போது தி.மு.க., செல்வாக்கு இழந்திருந்தது. "அவர்களின் ஆதரவை பெற வேண்டும்' என்ற நோக்கத்தோடு, 1984-88 கால கட்டத்தில், பொன்னர் - சங்கர் கதையை, தொடர்கதையாக எழுதத் தொடங்கினார்.மூலக்கதையின் தெய்வீக தன்மையை மாற்றி, நாத்திக கருத்துகளை புகுத்தி விட்டார். இப்போது, இதை படமாக எடுத்திருப்பதும் அரசியல் உள்நோக்கம் தான்.இது தவிர வேறு என்ன உதவி செய்தீர்கள், அதற்கான சன்மானம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா?
இந்த கதையை அவர் எழுதிக் கொண்டிருந்த போது, தொடர் வெளியான வார இதழ் ஆசிரியர், பாவை சந்திரன், சிலம்பொலி செல்லப்பன் போன்றோர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்காக சந்தேகங்கள் கேட்பர். அது சம்பந்தப்பட்ட தகவல்களை சொல்வேன். இதற்காக, எனக்கு எந்த சன்மானமும் கொடுக்கவில்லை; நானும் கேட்கவில்லை.நம் படைப்பு மக்களுக்கு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்தேன். புத்தகமாக வெளி வந்தபோது, அதன் முன்னுரையில் என் பெயரை ஒரு வரி குறிப்பிட்டிருந்தார், அவ்வளவு தான்.பொன்னர் - சங்கர் படத்திற்கு, சில அரசியல் அமைப்புகள், ஜாதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதே?
அவர்களின் எதிர்ப்பு நியாயமானது. கருணாநிதி கதை வசனத்தில், வெளி வந்திருக்கும் இந்தப் படத்தில், பொன்னர் - சங்கரை படு ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரித்து, கொங்கு மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர். கடவுள் நம்பிக்கையையும், கொங்கு கலாசாரமும் சீரழிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அண்ணன்மார் சுவாமி கதை இல்லை. இதில், பொன்னர் - சங்கர் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், இரண்டு பெண்களுடன் கும்மாளம் போடுவது போன்ற காட்சிகளும், இன்னும் சொல்லக்கூசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பொன்னர் - சங்கர் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்றாலும், மனைவியர் மேல் கைவிரல் கூட படாமல், துறவு வாழ்க்கையில் இருந்தவர்கள்.இந்த காட்சிகளை பார்க்கும் போது, மூலக்கதையை எழுதியவன் என்ற முறையில் என் மனம் வேதனைப்படுகிறது. குலதெய்வமாக வணங்கும், கொங்கு மக்களின் மனம் வேதனைப்படாதா?விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொன்னர் - சங்கரை தலித் சகோதரர்கள் என்று குறிப்பிடுகிறாரே ?இது தவறான கருத்து. பொன்னர் - சங்கர் கடவுளாக பாவித்து வணங்கப்பட்ட பிறகு, பல சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்; அதில் தவறில்லை. ஆனால், தலித் சகோதரர்கள் என்று குறிப்பிடுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?பொன்னர் - சங்கர் வாழ்ந்த காலத்தில், இதுபோன்ற ஜாதி குறித்த ஏற்றத்தாழ்வுகள் இல்லை. கரூரைச் சேர்ந்த பரணன் என்பவர், "கரூர் மாவட்ட வரலாற்று சங்கம்' என்ற நூலில், இது போன்ற சர்ச்சைக்குரிய தவறான கருத்துகளை எழுதியிருக்கிறார். அதற்கான எந்த ஆவண குறிப்பும், குன்றுடையான் கதைப்பாடல்களில் இல்லை. வையமலை சாம்புவன் என்ற தளபதியை பற்றி குறிப்புகள் உள்ளன. ஆனால், இவர் பொன்னர் - சங்கருடன் இருந்த முக்கிய படைத்தலைவராக இருந்திருக்கிறார். பல சமூகத்தவர்கள் பொன்னர் - சங்கருக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர், அவ்வளவுதான். அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது சரியல்ல.துறவறம் ஏன்?
மலைக்கொழுந்து கவுண்டரின் மகள் தாமரை. இவளுக்கு மணம் முடிக்க தந்தை வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால், தாமரை தன்னுடைய தாய் மாமன் குன்றுடையானை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவன் ஏழை என்பதால், மலைக்கொழுந்து கவுண்டர் ஏற்க மறுக்கிறார். தந்தை சொல்லை மீறி, தாமரை தன் தாய் மாமனை மணக்கிறாள். அதை, ஏற்றுக்கொள்ளாத மலைக்கொழுந்து கவுண்டர், ஊரை விட்டே விரட்டுகிறார். இதனால், ஆத்திரமடைந்த தாமரை, தன் தந்தையை எதிர்த்து சபதமிடுகிறாள். "எனக்கு இரண்டு வீரமகன்கள் பிறப்பர்; அவர்கள் இருவரும் உன்னுடைய பேத்திகளை மணம் முடித்து, குடும்ப வாழ்க்கை வாழாமல், வாழா வெட்டியாக்கி சிறையில் அடைப்பர்' என்கிறாள்.
தாமரையின் சபதப்படி, பொன்னர் - சங்கர் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள், வளர்ந்து தன் தாயின் சபதத்தை நிறைவேற்ற, மலைக்கொழுந்து கவுண்டருக்கு எதிராக போரிட்டு, மலைக்கொழுந்தின் பேத்திகளான முத்தாயி, பவளாயி ஆகிய இருவரையும் மணம் முடித்து, சிறையில் அடைத்து, தன் தாயின் சபதத்தை நிறைவேற்றுகின்றனர்.மணம் முடித்த பிறகும் இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே இருக்கின்றனர். இறுதி யுத்தத்தில், பொன்னரும் - சங்கரும் இறக்கின்றனர்.-நமது நிருபர்-

No comments: