"அம்பாறையில் மதமாற்றங்களைத் தடுக்க இந்துமத அமைப்புகள் முன்வரவேண்டும்' Wednesday, 20 April 2011 16:31 Hits: 25
அன்னமலை நிருபர் : அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மதமாற்றங்களைத் தடுப்பதற்கு இப்பகுதியிலுள்ள இந்து சமய அமைப்புகளும் சமயப் பற்றுள்ளவர்களும் முன்வரவேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் வி.கைலாசபிள்ளை தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்துமா மன்றத்திற்கான புதிய கட்டிடத்திறப்பு விழா அண்மையில் மன்றத்தின் தலைவர் வி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.45 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினை பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கைலாசபிள்ளை திறந்து வைத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; எமது இந்து மக்களின் வறுமையை காரணம் காட்டி பலர் அவர்களுக்கு சலுகைகளை வழங்கி மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.உலகில் காணப்படும் மதங்களில் இந்து மதத்திற்கென தனியிடம் உண்டு.இம் மதத்தில் பொதிந்துள்ள கருத்துகளை சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் தெளிவூட்டுவதற்கு இந்து அமைப்புகள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும்.
அந்த வகையில் ஆலையடி வேம்பு பிரதேச இந்து மாமன்றம் இங்குள்ள மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன.இந்த இந்து மாமன்றத்தின் செயலாளராக இருக்கின்ற சரவணபவனின் செயற்பாடுகள் மூலம் இப்பிரதேசத்தில் இந்து மதமும் சமூகப் பணியும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள்,மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள்,சீருடைத் துணிகள் வழங்கல்,சமய விழாக்கள் என்பவற்றை இம் மன்றம் முன்னின்று செயற்படுத்தியது. இந்து சமயத்தை விழிப்படையச் செய்வதற்கும் மதமாற்றத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் இவ்வாறான அமைப்புகள் செயற்படும் விதம் பாராட்டத்தக்கதாகும்.இங்கு திறக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தை இந்துக்கள் அனைவரும் சமய விழாக்களுக்கு பயன்படுத்தி நன்மைபெறவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன்,இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஞானமயானந்தாஜீ,மன்றச்செயலாளர் வே.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இக்கட்டிடத்திற்கான கணிசமான நிதியுதவியினை அகில இலங்கை இந்து மா மன்றமும் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment