நாயன்மார் காட்டிய வழிகளை பின்பற்றி இந்துக்கள் வாழவேண்டும்
Friday, 01 April 2011 11:02
அப்புத்தளை நிருபர் : இந்துக்களாகிய நாம் சைவசமய விழுமியங்களை பின்பற்றுபவர்களாகவும் போற்றுபவர்களாகவும் வாழ வேண்டும். அதற்கு நாயன்மார் காட்டிச் சென்ற நல்லவழிகளை பின்பற்ற வேண்டும். இதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் சைவப்பணிகளில் அதீத அக்கறை காட்டிவரும் அப்புத்தளை சைவ இளைஞர் மன்றத்தின் மகத்தான சேவைகள் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு பலாங்கொடை தமிழ் வித்தியாலய அதிபரும் சைவப் பணியாளருமான இளம்புலவர் எஸ்.ஜெயராஜ் தெரிவித்தார்.
அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் நடத்திய மகா சிவராத்திரிப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழாவில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்;
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் உணர்வுபூர்வமானது என்பதுடன் நெஞ்சில் நிலைத்திருக்க வல்லது.
இந்து மதத்தின் தொன்மை பண்பாட்டை கட்டிக்காக்கவும் தமிழர் தம் பெருமையை உலகுக்கு உணர்த்தவும் அடிகோலுகிறது.
முருகு என்ற அழகுக்குரிய முருகனும் ஏனைய பரிவார மூர்த்திகளும் இம் மண்டபத்திலிருந்து அருளும் விநாயகப் பெருமான் சகிதம் நமக்கருளும் திருவருளால் வாழ்வில் உய்வோம். அதற்கு இறை மூர்த்தங்கள் மீதான பாடல்களை பயில்வோம் என்றார்.
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வெங்கட்ராம குருக்களின் ஆசியுரையோடு விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்றத்தின் தலைவர் என். சின்னசாமி தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பதுளை, பண்டாரவளை கல்வி வலயங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலை மாணவர்களும் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பல்வேறு நடன, இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இலங்கை வங்கி பதுளை மாவட்ட முகாமையாளர் கே.குலசேகரம், மன்ற போஷகர் எம்.பழனிச்சாமி, சிவராத்திரி போட்டி இணைப்பாளர் கவிஞர் கே.இராதா மணாளன், ஓய்வு பெற்ற அதிபர் எம்.கார்த்திகேயன், அப்புத்தளை நகரசபை உறுப்பினரும் மன்ற செயலாளருமான கே.சிவகுமார் மற்றும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
1 comment:
அருமையான பதிவு. நன்றி
Post a Comment