Sunday, April 03, 2011

சாவ.வாரிவானேஸ்வரர் ஆலயத்தில் பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்பு


சாவ.வாரிவானேஸ்வரர் ஆலயத்தில் பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்பு


சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலயக் திருக்குளத்திலிருந்து பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக வரலாற் றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளதாவது,

சாவகச்சேரி நீதிமன்ற வளவில் புராதன ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகள் கிடைத் ததைத் தொடர்ந்து அவ் ஆலயம் பற்றிய பல தகவல்கள் அவ் ஊர் மக்களால் தினமும் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலய முகாமையாளரால் தரப்பட்ட தகவல்கள் எமது ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல தூண்டுதலாக உள்ளன.

அவரது தகவல்களின்படி நகரத்திலுள்ள நீதிமன்றம், சந்தை மற்றும் அதன் சுற்றாடல்களில் கிடைத்த விக்கிரகங்களே ஆரம்ப காலங்களில் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடப்பட்டதாகவும், அவற்றில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக அவை அவ் ஆலய திருக்குளத்தில் போடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது உண்மையா என்பதை அறியும் நோக்கில் கடந்தவாரம் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் மற்றும் தொல் லியல், வரலாறு மாணவர்களுடன் இணைந்து அத்திருக்குளத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது பன்னிரண்டு இந்து விக்கிரகங்களை மீட்க முடிந்தது. கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட அவ் விக்கிரகங்கள் அனைத்திலும் உடைவுகள் காணப்படுவதால் ஆகம விதிக்கு ஏற்ப இவ் விக்கிரகங்கள் ஆலயத்திருக்குளத்தில் போடப் பட்டுள்ளதென்பது தெரிகிறது.

இங்கு கிடைத்த விக்கிரகங்களுள் முருகன், வள்ளி, சூரியன், சந்திரன், நந்தி என் பன சிறந்த தொழில் நுட்பத்துடன் செதுக்கப் பட்டுள்ளதை காணமுடிகிறது. இவற்றை ஆய்வு செய்த தமிழகத் தொல்லியலாளரான பேராசிரியர் இராசவேலு, கலாநிதி ராஜகோ பால், சிறிதரன் போன்றோர் பழமைவாய்ந்த இவ் விக்கிரகங்கள் இலங்கை நாட்டு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட சுதேச கலை மரபுக்குரிய தென குறிப்பிடுகின்றனர்.

கோயில் முகாமையாளர் கூறுவது போல் இவ் விக்கிரகங்கள் சாவகச்சேரி நீதிமன்ற சுற்றாடலில் கிடைத்தவையாக இருப்பின் இங்கு சிவன் ஆலயத்துடன் முருகன் ஆலயமும் முன்பொரு காலத்தில் இருந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. இதையே திருக்குளத்தில் கிடைத்த முருகன் ஆலயத்துக்குரிய விக்கிரகங்கள் உறுதி செய்கின்றன. அதை எதிர் கால ஆய்வுகள் தான் உறுதி செய்ய வேண்டும்.

No comments: