Wednesday, April 27, 2011

மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கு :ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கு :ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு


திருநெல்வேலி : மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 தடா கைதிகள் பலத்த பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை இந்துமுன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை திலகர் திடல் போலீசார், தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாகுல் ஹமீது, அப்துல்அஜீஸ், சுபைதார், ஜாகிர் உசேன், சீனிநயினா முகமது, ராஜா உசேன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சீனிநயினா முகமது மட்டும் ஜாமீனில் வெளியில் உள்ளார். மற்ற கைதிகள் சென்னை, கோவை, திருச்சி, பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் (தடா) நேற்று நடந்தது. நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் கைதிகள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த இரு நாட்களாக அரசு தரப்பு விவாதம் நடந்தது. அரசு தரப்பில் ஏற்கெனவே 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 72 சான்று ஆவணங்களும், 13 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எதிர்தரப்பு விவாதம் நடத்துவதற்காக வரும் ஜூன் மாதம் 9ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாகிர் உசேன்,""கோவையில் உள்ள தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 3 நாட்கள் பரோலில் விடும்படி'' கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி விஜயராகவன் ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.

No comments: