சைவவித்தகர் பட்ட கற்கை நெறிக்கு இந்து மாமன்றம் விண்ணப்பம் கோரல் Wednesday, 06 April 2011 13:45 Hits: 41
அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ்ப்பாணம் இந்து மாமன்றப் பிராந்திய நிலையத்தில் சைவவித்தகர் பட்டத்திற்கான நெறியை ஆரம்பிக்கவுள்ளது.
சைவசமயப் பிரசாரகர்களையும் தொண்டர்களையும் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கில் இவ்விசேட பயிற்சி கற்கைநெறி முழுநேரமாக இடம்பெறவுள்ளது. ஒரு வருட காலத்தைக் கொண்ட இப்பயிற்சி நெறியைத் தொடரும் மாணவர்களுக்கு தங்குமிட வசதி, உணவுடன் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் ஊக்குவிப்பு நன்கொடையும் வழங்கப்படும். சமயநெறியூடாக சமூகசேவை மற்றும் ஆளுமை பற்றிய பயிற்சியும் வழங்கப்படும்.
அறிவும் அனுபவமும் ஆற்றலுமிக்க பல்துறைசார் அறிஞர்களால் பயிற்சி வழங்கப்படும். அத்துடன், இவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவும் கணினிப் பயிற்சியும் கூட வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் விசேட பரீட்சை நடைபெற்று இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியைப் பெற்றவர்கள் அரச, சமய நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிபரத்துடன் அண்மையில் பெற்ற இரு நற்சான்றிதழ்களையும் தேசிய அடையாள அட்டையின் பிரதியையும் இணைத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரிகள் நேர்முகப்பரீட்சை/ எழுத்துப் பரீட்சை மூலம் நாடளாவிய ரீதியில் சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். விண்ணப்பங்களை பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம் 91/5 சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை, கொழும்பு02 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். யாழ்ப்பாணத்தில் இல.211/17, கோயில் வீதி, நல்லூரில் இருக்கும் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் மன்னார் மாவட்ட ஆலய ஒன்றியத்தின் அலுவலகத்திலும் வவுனியாவில் ஸ்ரீசிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அலுவலகத்திலும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்திலும் இவ்விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்.
No comments:
Post a Comment