Monday, August 29, 2011

ராஜீவ் கொலைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி என்று பலவாறாக அரசுக்குக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் சில நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன. பல நாடுகள் தூக்குத் தண்டனையை நிறுத்தும் எண்ணத்தில் உள்ளன. இந்தியாவிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, மரணதண்டனை கீழமை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில் இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவதால், இந்தியாவில் பெரிய அளவில் இதற்கான போராட்டங்கள் எழவில்லை.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைத் தூக்கிலிடக்கூடாது என்ற கோரிக்கையுடன் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டபோது, அக்கோரிக்கை வலுவிழந்தது. அப்சல் குருவை மனதில்கொண்டு வைக்கப்படுவதாகப் பார்க்கப்பட்டது.
கருணை மனுவை, குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலம் முழுவதுமே அப்துல் கலாம் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் வழியில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கிடப்பில் போட்டிருக்கலாம். நாட்டில் எத்தனையோ விவகாரங்கள் முன்னுரிமைப் பெறக் காத்திருக்கும்போது, இந்தக் கருணை மனுவை நிராகரித்ததன் மூலம் அரசுக்குக் கிடைத்த நன்மைதான் என்ன?
தற்போது, ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகள், ஏறக்குறைய இரட்டை ஆயுள் தண்டனையைச் சிறையில் கழித்துவிட்டனர். அவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. காரணம், இந்தப் போராட்டத்துக்கு ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்தவித நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. நிலமோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி நீதிமன்றப் படியேறும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை மட்டுமே கொடுக்க முடிகிறது.
தூக்குத் தண்டனைக்கு செப்டம்பர் 9-ம் தேதி என்று நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தப் போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்படுகின்றன. கடந்துசெல்லும் ஒவ்வொரு வினாடியும் மூன்று பேரின் ஆயுளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், நாடாளுமன்றத்தில் ஜன லோக்பால் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது. சாதாரண நாளிலேயே நாடாளுமன்றத்துக்கு காது கேட்காது. இப்போது நாடாளுமன்றத்தின் காதில் கேட்கும் வார்த்தை லோக்பால் மட்டுமாகத்தான் இருக்கும்.
எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனையைக் குறைக்கின்ற அல்லது ரத்து செய்கின்ற அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவு 72. இதைப்போலவே, சட்டப் பிரிவு 161-ம் மாநில ஆளுநர் எந்தவொரு குற்றவாளிக்கும் இந்திய நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்கவோ ரத்து செய்யவோ முடியும் என்கிற அதிகாரத்தை வழங்குகிறது. ஆகவேதான், இந்த மூவருக்கும் நிறைவேற்றப்படவுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கவும், தண்டனையைக் குறைக்கவும் சட்டப்பேரவையில் தீர்மானம் போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழகத்தின் ஆளுநர் பதவிக்காலம் முடிந்து, புதிய ஆளுநராக ரோசையா நியமிக்கப்பட்டுள்ளார். ரோசையா ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், பழுத்த காங்கிரஸ்காரர். ஏற்கெனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை ரத்து என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதை ஏற்பதும் ஏற்காததும் ஆளுநரைப் பொருத்தது. அவரை யாரும் பலவந்தப்படுத்த முடியாது. மேலும், குடியரசுத் தலைவரே கருணை மனுவை நிராகரித்த பின்னர், மாநில ஆளுநர் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முயற்சிப்பாரா என்பது சந்தேகம்தான்.
இருந்தாலும்கூட, தமிழக அரசு ஒரு முயற்சியாக இத்தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பதில் தவறில்லை. ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராஜன், சுபா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர். தற்போது தூக்குத் தண்டனை பெற்றவர்கள், கொலையாளிகளுக்கு உதவியாக நின்றவர்கள் மட்டுமே. அரிவாளால் வெட்டியவனுக்கு அளிக்கப்படும் அதே தண்டனையை, அரிவாளை எறவாணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தவன், துடைத்துக் கொடுத்தவன், சாணை தீட்டியவனுக்கெல்லாம் அளிக்க முடியுமா?
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளும்கூட, பஸ்ஸூக்குத் தீ வைத்தபோது, கொலைசெய்யும் உள்நோக்கத்துடன், திட்டமிட்டு மூன்று மாணவிகளை பஸ்ஸூக்குள் வைத்து எரித்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களும்கூட மன்னிக்கப்பட வேண்டியவர்கள்தான். இந்த ஆறு பேருக்குமேகூட தூக்குத் தண்டனை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்.
மதுரை தினகரன் அலுவலகத்தில் இறந்த மூன்று பத்திரிகையாளர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்றால், இவர்களும் மன்னிக்கப்படத்தான் வேண்டும்.

நன்றி தினமணி

2 comments:

எழில் said...

கசாப்புக்கு தினமும் பிரியாணி , தமிழர்களுக்கு தூக்கா ???

-
தினமணி தலையங்கத்தின் கீழ் ஒரு கமெண்ட்

Unknown said...

அந்த க்மெண்டில் என்ன தப்பு எழில்