திருச்சியில் பிஷப் இல்லம் முற்றுகையால் பரபரப்பு
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2011,01:15 IST
கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய
திருச்சி: திருச்சியில் "சர்ச்' அருகே திருமண மண்டபம் கட்ட பணம் தரமறுக்கும் பிஷப் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மறை மாவட்ட பிஷப் அந்தோணி டிவோட்டாவின் இல்லம் மேலப்புதூரில் உள்ளது. அவரது இல்லத்துக்கு நேற்று காலை செந்தண்ணீர்புரத்தை அடுத்துள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கவுன்சிலர் ஜெயபாரதி, முன்னாள் கவுன்சிலர் தினகரன் ஆகியோர் தலைமையில் பிஷப்பை பார்க்க வந்தனர். ஆனால், மூன்று மணிநேரம் காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலக்கரை போலீஸார் சம்பவ இடம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி பிரச்னை குறித்து விசாரித்தனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது: சங்கிலியாண்டபுரம் தெரசாள்புரத்தில் ஒரு சர்ச் உள்ளது. அதற்கு பக்கத்தில் இருதயசாமி என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நிறைவுப்பணிக்கு பிஷப் சார்பில், 23 லட்சம் ரூபாய் தரவேண்டி உள்ளது. அதை கேட்டபோது பிஷப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். பணத்தை வற்புறுத்தி கேட்ட பாதிரியார் மனுவேல் என்பவரை சஸ்பெண்ட் செய்வதாக பிஷப் மிரட்டியுள்ளார். மேலும், செந்தண்ணீர்புரத்தில் உள்ள சர்ச் பாதிரியார் நிதிமோசடி செய்துள்ளார். அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்காமல், அவரை பிஷப் காப்பாற்றி வருகிறார். ஆகையால், வரவு செலவு காட்ட வேண்டும் என்று தான் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், பிரச்னை குறித்து மேல்சபை வரை கொண்டு செல்ல தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment