நாடார்களை இழிவுபடுத்திய கால்டுவெல்லுக்கு சிலையா?
கிளம்பும் புது சர்ச்சை!
நாடார்களை இழிவுபடுத்திய பிஷப் கால்டுவெல்லுக்கு தமிழக அரசு சிலை திறந்தது, தென் மாவட்ட நாடார்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், ‘‘கால்டுவெல் நாடார்களை எப்படியெல்லாம் கொச்சைப்-படுத்தி-யிருக்கிறார் என்று விளக்கி, ‘மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி-யிருக்கிறார் ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரியும் ராம் டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலருமான காசிவேலு. அந்த புத்தகத்தை இப்போது படியெடுத்து தேர்தல் பிரசாரத்தில் கொடுத்துக் கொண்டிருக்-கிறோம்’’ என்று நம்மிடத்தில் ஒரு குண்டை போட்டார் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கண்ணன்.
‘கால்டுவெல் அப்படி என்னதான் நாடார்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்?’ என காசிவேலுவிடமே கேட்டோம்.
‘‘கி.பி.1814&ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்தில் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் பிஷப் கால்டுவெல். 28.11.1841&ல் நாசரேத் மற்றும் இளையான்குடி பகுதிக்கு வந்த இவர் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வரவில்லை... கிறிஸ்தவ ஆட்சியை வளர்க்கத்தான் வந்தார்.
நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு 1849&ம் ஆண்டில் ‘திருநெல்வேலி சாணார்கள்’ என்ற தலைப்பில் நாடார்களை இழிவுபடுத்தி 77 பக்கங்கள் கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதில் நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வந்து தென்மாவட்டங்களில் குடியேறிய வந்தேறிகள் என்றும், ராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவர் என்றும் நாடார்களுக்கு பனையேறுவது, கருப்பட்டி தயாரிப்பது, விவசாயம், வியாபாரம் இதுதான் தொழில். இவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல என்றும் நாடார்களின் பழக்க வழக்கங்களை மிக மிக தரக்குறைவாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக்கால கட்டத்தில் இதைப்பார்த்த, இந்துக்களில் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரசாரத்தை உண்மை என நம்பி நாடார்களை இழிந்த சாதியினர் என்றும் அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று தடுத்ததோடு மட்டுமல்லாமல் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் 1872&ம் ஆண்டு வழக்கும் தொடர்ந்தனர்.
அந்த சமயம் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர், கால்டுவெல்லின் பொய் பிரசாரத்தை கடுமையாக எதிர்த்ததோடு, நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிவர்கள் அல்ல என்றும், மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தைச் சேர்ந்த உயர்ந்த வம்சத்தினர் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நாடார்கள் ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நாடார்கள் வென்றனர்.
சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்கால கட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த அருமைநாயகம் என்ற கிறிஸ்தவ நாடார். இவரைத் தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறிஸ்தவ நாடார்கள் கால்டுவெல் பாதிரியார் வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக சாடினர். சாணார்களின் எதிர்ப்பை சந்தித்த கால்டுவெல் தனது, ‘திருநெல்வேலி சாணார்’ எனும் புத்தகத்தை திரும்பப்பெற்றார். ஆனால், தனது கருத்தினை திரும்பப்பெற மறுத்து-விட்டார்...’’ என்று விளக்கிய காசிவேலு மேலும் தொடர்ந்தார்.
‘‘இது மட்டுமல்லாமல் இறைவன் சிவ-பெருமானுக்கும், சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பிளவுபடுத்தி, பிரிவினை எனும் நஞ்சை கலந்திட்டதன் வாயிலாக உருவாக்கப்பட்டதுதான் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை 30 எழுத்துக்களைக் கொண்ட தமிழுடன் இணைத்து இவை திராவிட மொழிக் குடும்பம் எனவும் சமஸ்-கிருதத்துடன் திராவிட மொழிக் குடும்பம் சற்றும் தொடர்பில்லாதது எனும் பொய்யை உருவாக்கினார். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றின் கலப்பால் உருவானது என்பது இன்றும் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.
இப்படிப்பட்ட கால்டுவெல்லுக்கு நெல்லை மாவட்டம் இடையன்குடியில் நினைவு இல்லத்தை திறந்துவைத்து அங்கு சிலையும் திறந்துள்ளார் முதல்வர் கலைஞர். கால்டுவெல்லுக்கு சிலை திறந்தது நியாயமல்ல. நியாயமாக சிலை வைக்க வேண்டியது அய்யா-சாமி தீட்சிதருக்கும், அருமைநாயகம் என்ற சட்டாம் பிள்ளை சாணார் ஆகியோருக்குத்தான். கால்டுவெல் எழுதிய புத்தகத்தில் நாடார்களை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நான் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். இந்த வரலாற்று உண்மையை உலகம் முழுவதும் உள்ள நாடார்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நாடார் சமுதாயத்திற்கு எதிரான பிஷப் கால்டுவெல்லுக்கு சிலை திறந்ததால், வரும் தேர்தலில் தி.மு.க. பாதிப்புக்குள்ளாகும்’’ என்றார்.
இந்தத் தகவலை நம்மிடம் சொன்ன இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.
‘‘இன்று இரண்டாம் கால்டுவெல் என்று கருணாநிதியை சிலர் அழைக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் நாடார்கள் வந்தேறிகள், சோம்பேறிகள், சுயநலம் மிக்கவர்கள் என்ற கால்டுவெல்லின் கருத்தை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா? இதை அவர் விளக்கவேண்டும். மேலும் இந்து நாடார்களின் ஒப்பற்ற தலைவரான தாணுலிங்க நாடாருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றும் அவர் செவிமடுக்கவில்லை. எனவே தி.மு.க.வின் இந்த இந்து நாடார் எதிர்ப்புப் போக்கை மக்களிடத்தில் கொண்டு செல்வோம். தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம்’’ என்றார்.
No comments:
Post a Comment