Monday, March 14, 2011

மக்கள் ஒருக்காலும் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் ஒருக்காலும் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்




" நாம் உள்ளே நுழையும்போது, வேட்பாளர் ஒருவரும் நுழைந்து, தலைவருக்கு சால்வை போர்த்தி, ஆசி பெறுகிறார். "எப்படி இருக்கிறது நிலைமை?' என, இவர் கேட்க, "நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் ஜி!'' என்கிறார் அவர். "நான் எதிர்பார்ப்பது வெற்றி மட்டுமே' என உறுதியோடு சொல்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். மத்தியில் ஆண்ட கட்சியை, மாநிலத்தில் ஆளும் கட்சியாக மாற்றும் இமாலய லட்சியம் இருப்பதால், அபூர்வமாக சிரிக்கிறார். சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் நமக்களித்த பேட்டி:

எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறீர்கள்?
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம். குறைந்த பட்சம் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்.

எந்த நம்பிக்கையில் இத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?
தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியே நடந்து வந்திருக்கிறது. இத்தனை ஆண்டு களில் ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி, மாநிலத்தில் ஏற்படவில்லை. பா.ஜ., ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற பல மாநிலங்களின் குறுகிய கால வளர்ச்சி நிலையை ஒப்பிட்டுக் காட்டி, அதுபோன்றே தமிழகத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழக மக்கள் வாக்களிப்பர் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறோம்.

வெற்றிக்கான வியூகமாக எதை வைத்திருக்கிறீர்கள்?
இரட்டை இலக்கத் தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற முடிவோடு, சில தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். அவற்றில் வெற்றியும் பெறுவோம். மேலும், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் எங்கள் ஓட்டு வங்கியை, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் எங்கள் வியூகம் இருக்கும்.

இது எப்படி சாத்தியம்?
தமிழகத்தில் பெரும்பான்மையான இந்து சமுதாயத்தின் நன்மைக்காக, அவர்களுடைய பாதிப்பு களை அகற்றும் வகையில், அவர்களுக் காகவும் குரல் கொடுப் பதற்கு, தமிழகத்தில் எந்தக் கட்சியும் தயாரில்லை. அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றிருக்கிறோம். எல்லா மத, ஜாதி, மொழி சார்ந்தவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில், பா.ஜ., தவிர எந்தக் கட்சியும் உறுதியாக இல்லை. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் குடும்ப கட்சியாக பா.ஜ., மாறியிருக்கிறது. அதன் அடிப்படையில், கூடிய விரைவில் இந்த மாற்றங்கள் தெரியும்.தமிழகத்துக்காக, நாட்டில் இருக்கும் அனைத்து மாநில மக்களும் குரல் கொடுக்கும் சூழ்நிலை யை உருவாக்க பா.ஜ., வால் மட்டும் தான் முடியும்.

இந்துக்களுக்காகவும் என நீங்கள் அழுத்துவது, இந்துக்களுக்கு மட்டுமே நீங்கள் ஆதரவானவர்கள் என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக இல்லையா?
கிறிஸ்தவர்களுக்காகவும் எனும்போது கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே என்றோ, முஸ்லிம்களுக்காகவும் எனும்போது முஸ்லிம்களுக்காக மட்டுமே என்றோ கருதப்படவில்லை. இந்துக்களுக்காவும் என்று சொல்லும் போது மட்டும், இந்துக்களுக்காக மட்டுமே என்று ஏன் நினைக்கிறீர்கள்?

இந்துக்களுக்கு பா.ஜ., மேல் அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதா?
விஸ்தாரமான மனப்பான்மை கொண்டவர்கள், தங்கள் மீது நடத்தப்படும் அரசியல் ரீதியான தாக்குதல்கள் பற்றி அறியாதவர்கள், அறிந்தாலும் ஒருங்கிணைந்த சக்தி ஏற்படாததால், அதை எதிர்க்கத் துணியாதவர்கள், அந்த சக்தி ஒன்றுபட்டு வரும்போது; இந்து சமுதாயத்தை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிற, அடமானம் வைத்திருக்கக் கூடிய அரசியல் கட்சிகளின் சாயம் வெளுத்துவிடும்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மாதிரியான இந்து அமைப்புகள் மனப்பூர்வமாக உங்களை ஆதரிக்கின்றனவா?
ராம.கோபாலன் தலைமையிலான இந்து முன்னணி, எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எங்கள் நன்றி. இந்து மக்கள் கட்சியும் எங்களை ஆதரிப்பதாக பத்திரிகைச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டோம். அது பாராட்டப்பட வேண்டிய முடிவு.தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து இயக்கங்களும் தமிழக மக்களின், இந்துக்களின் நலன் கருதி, ஒரே கட்சியாக குவிய வேண்டும். குறிப்பாக, தேர்தல் காலத்தில், இந்து விரோத சக்திகள் ஒருமுனைப்படத் துடிக்கும் போது, இந்து சக்திகள் பிளவுபடுவது சரியல்ல.

குறிப்பிட்ட தொகுதிகளை ­மட்டும் தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் கூடுதல் ஓட்டு வாங்க முடியும் என்ற கருத்து பற்றி?
நாங்கள் போட்டியிடுவதால், தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என யார் அஞ்சுகிறார்களோ அவர்கள் தான் இதைச் சொல்ல முடியும். அகில இந்திய அளவில் அரசியல் நடத்தும் கட்சி தமிழகத்திலும் 30 ஆண்டுகளாக அரசியல் நடத்துபவர்கள், நாங்கள். நிச்சயமாக எங்கள் வெற்றி வாய்ப்பு உறுதிப்படக்கூடிய வகையில் எங்கள் பணிகள் அமையும்.

இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்ற வி.ஐ.பி., வேட்பாளர்கள் எங்கே?
அவர்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர்கள். தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பவர்கள். தேர்தல் பணிக்காகவும் தலைவர்கள் தேவை என்பதால், அதற்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ளனர்.

வி.ஐ.பி., வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் உங்கள் ஓட்டு அதிகரிக்கத் தானே செய்யும்?
கடந்த 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை போட்டியிடவில்லை. அதனால், அவர்களின் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை.

தொகுதிக்கு 16 லட்ச ரூபாய் வரை செலவழிக்கலாம் என தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. அவ்வளவு பணத்தையாவது உங்கள் கட்சி செலவழிக்க முடியுமா?
இன்றைக்கு மக்களுக்குத் தேவை தொண்டுள்ளமும், பொதுவாழ்வில் துறவுள்ளமும் கொண்டவர்கள் தான். ஆகையால், பணம் ஒரு பொருட்டாக அமையாது. பணத்தை மட்டுமே முக்கியமாக கருதினால், நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தி.மு.க., ஏற்கனவே இரண்டுகட்ட பட்டுவாடாவை முடித்துவிட்டது. பணத்தின் அடிப்படையில் அவர்கள் முன் யாராலும் நிற்கவே முடியாது. ஆனால், அதிகப்படியான பணம் கொடுப்பவர்களின் செல்வாக்கு குறையும் என்பது தான் இன்றைய நிலை.

திருமங்கலம் பார்முலாவே உருவான பிறகும், இதை நீங்கள் நம்புகிறீர்களா?
அந்நேரத்தில் மக்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் போன்ற பிரச்னைகள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. இன்று, அந்தப் பணம் ஏழைகள், உழைப்பாளிகள் வீட்டில் இருந்து சுரண்டப்பட்டுள்ளது என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே, அது தற்காலிக வெற்றியே தவிர, நிரந்தரமான தோல்விக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மக்களே பணம் கேட்கிறார்களே?
எதற்குமே ஓர் எல்லை உண்டு. விஷயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் போது, மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் மக்களே, நாட்டுக்கு ஓர் ஆபத்து என்றால், தங்களிடம் உள்ள எல்லா விஷயங்களையும் கொடுத்துவிடக் கூடிய மனநிலை படைத்தவர்கள் நம் மக்கள். எனவே, ஒருக்காலும் அவர்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள். அதுவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள்.

கூட்டணிக்காக எந்தக் கட்சியிடமாவது ஆதரவு கேட்பீர்களா?
மக்களிடம் தான் கேட்போம். தமிழகத்தில் உள்ள எல்லா சமுதாய மக்களிடமும் நாங்கள் கேட்பது, உங்களுக்காக, மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக, அனைத்து மத, ஜாதி மக்களின் முன்னேற்றத்துக்காக, எங்களுக்கு வாக்களியுங்கள் என்பது தான்.

குறுகிய வரலாறு கொண்ட தே.மு.தி.க., இந்தளவு வளர்ந்துவிட்ட போது, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கான மாற்று என்பதை முன்னிறுத்த பா.ஜ., தவறிவிட்டதா?
2009 லோக்சபா தேர்தலில் அவர்கள் எல்லா தொகுதியிலும் போட்டியிட்டாலும், எங்கும் அவர்கள் டிபாசிட் கூட வாங்கவில்லை. நாங்கள் வாங்கியிருக்கிறோம். அதில், 234 சட்டசபை தொகுதிகளில் எங்குமே அவர்கள் முதன்மைக் கட்சியாக வரவில்லை. நாங்கள் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் மக்களுக்கு பா.ஜ., மீது ஈர்ப்பு இருப்பதே.

No comments: