Monday, August 10, 2009

கர்னாடகா பாஜக முயற்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்


பெங்களூர்: பெங்களூர் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.

சிலை திறப்புக்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பந்துக்கு அழைப்பு விடுத்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பந்துக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால் நகரில் முழு அமைதி நிலவியது.

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள பூங்காப் பகுதியில், தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அப்போதைய முதல்வர் பங்காரப்பா சிலையைத் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டு விழாவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது.

ஆனால், விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக புலிகேசி கன்னட சங்கம் என்ற அமைப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இடைக்காலத் தடை வாங்கி விட்டது. அதன் பின்னர் சிலையைத் திறக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

சிலையை சாக்குத் துணியால் மூடிவைத்து விட்டனர். இந் நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், திருவள்ளுவர் சிலைக்கு விடிவு காலம் பிறந்தது.

இந் நிலையில் திருவள்ளுவரின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். இதற்கான விழா காலை 11 மணிக்குத் அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளித் திடலில் தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெங்களூர் தமிழர்கள் பங்கேற்றனர்.

விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

கர்நாடக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜி நகர் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், பெங்களூர் மத்திய தொகுதி பாஜக எம்.பி. மோகன், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பெங்களூர் தெற்கு பாஜக எம்பி அனந்த்குமார், மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெயகத்ரட்சகன், தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஏ.வ.வேலு, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார்.

சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர்.

இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார்.

சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல், தற்கொலை முயற்சி...

இதற்கிடையே, திருவள்ளுவர் சிலை திறப்பை கண்டித்து கன்னட வேதிக ரக்ஷனே அமைப்பை சேர்ந்த 33 வயதான தொண்டர் ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதே போல் மைசூரில் இந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அரசு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

ஹசன், தும்கூர், சிக்மாங்களூர், மங்களூர், மைசூர், மட்டூர் மற்றும் பாகல்கோட் ஆகிய பகுதிகளில் சில கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மைசூர், பாகல்கோட்டில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஆயிரம் பேர் கைது...

இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கன்னட வேதிக ரக்ஷனே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவலி தலைவர் வட்டாள் நாகராஜ் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டவரை கைது செய்தனர்.

No comments: