Monday, August 17, 2009

எம்.எஸ். சுவாமிநாதன் அறிவிப்பு: வடகிழக்கில் தமிழர்களின் துயர் தீரும் வரை நான் இலங்கைக்குப் போக மாட்டேன்

இலங்கை-சுவாமிநாதனுக்கு பதிலாக புதிய விஞ்ஞானிகள் குழு
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16, 2009



சென்னை: இலங்கையின் வடகிழக்கில் விவசாய பணிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட எம்.எஸ்.சுவாமிநாதன் மறுத்துவிட்டதை அடுத்து வேறு குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போர் நடந்த வடகிழக்கு பகுதியில் விவசாய பணிகளை சீரமைக்கும் நோக்கில் இலங்கை அரசு வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை துவக்க முயற்சித்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு உதவ வேண்டும் என இலங்கை அரசு, இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை கேட்டு கொண்டது. அவரும் ராஜபக்சேவை சந்தித்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தமிழ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்நிலையில் வடகிழக்கில் தமிழர்களின் துயர் தீரும் வரை அந்த திட்டத்துக்காக நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என எம்.எஸ். சுவாமிநாதன் உறுதியாக கூறிவிட்டார்.

இதையடுத்து தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகளை கொண்ட குழுவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

விரைவில் இலங்கையில் விளைச்சலுக்கான சீசன் துவங்குவதாலும், வட கிழக்கு பகுதியில் கன்னிவெடிகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருவதாலும் இந்த குழுவினர் இந்த மாத இறுதியில் இலங்கை செல்வார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் வடகிழக்கில் மண்ணின் தரம், விவசாய வசதிகள், வானிலை ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை தர இருக்கிறார்கள்.

No comments: