Sunday, May 29, 2011

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய மேலூர் என்ஜினீய

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய மேலூர் என்ஜினீயர் பற்றி விசாரிக்க மும்பை போலீசார் முகாம்
பரபரப்பு தகவல்கள்


மதுரை, மே.24-


பாகிஸ்தான் தீவிரவாதி இயக்கத்துக்கு ஆள் அனுப்பியதாக பிரான்சில் கைது செய்யப்பட்ட மேலூர் என்ஜினீயர் பற்றி விசாரிக்க மும்பை போலீசார் முகாமிட்டு உள்ளனர்.

மேலூர் என்ஜினீயர்

அல்ஜீரியாவில் இருந்து கடந்த 10-ந் தேதி பாரீஸ் சென்ற விமானத்தில் பயணம் செய்த முகமது நியாஸ் அப்துல் ரஷித் (வயது 33) உள்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் முகமது நியாஸ் அப்துல் ரஷித் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட உளவுப்பிரிவு துணை சூப்பிரண்டு இசக்கி ஆனந்தன் தலைமையிலான உளவு போலீசார் மதுரை நகர், புறநகர் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது நியாஸ் அப்துல் ரஷித் என்ற பெயரில் மேலூர் நகருக்குள் 2 பேரும், மேலூர் புறநகர் பகுதியில் 6 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பிரான்சில் கைது செய்யப்பட்ட முகமது நியாஸ் அப்துல் ரஷித் யார் என்று அடையாளம் காணுவதில் உளவு போலீசார் குழப்பம் அடைந்தனர்.

மும்பை போலீசார்

இந்த நிலையில் மும்பையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். அவர்கள் முகமது நியாஸ் அப்துல் ரஷித் பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மேலூரை சேர்ந்தவர் என்பது உறுதியானது. தொடர்ந்து மேலூரில் மும்பை போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேலூர் சந்தைபேட்டையில் ஒரு டெலிபோன் டவர் அருகே அவரது வீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது.

இதுபற்றி மும்பை போலீசார் கூறியதாவது:-

முகமது நியாஸ் அப்துல் ரஷித் பற்றி அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது, அவரது தந்தை அப்துல் ரஷித் மதுரையில் ஒரு தனியார் மில்லில் பணியாற்றியவர் என்பது தெரிகிறது. இவருக்கு முகமது நியாஸ் அப்துல் ரஷித் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். மகள் இருவரும் திருமணமாகி கணவருடன் கத்தார் நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று உள்ளனர். முகமது நியாஸ் அப்துல் ரஷித்தின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மில் வேலையில் இருந்து விலகி துபாய் நாட்டுக்கு சென்றுவிட்டார்.

தாயார்

அங்கிருந்து அடிக்கடி கத்தாரில் உள்ள மகள்கள் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். மகன் முகமது நியாஸ் அப்துல் ரஷித் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த கருத்த உருநிஷா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன்பின் அவர் பிரான்ஸ் சென்று விட்டார். ஆனால் அவரது மனைவி எங்கு இருக்கிறாார் என்பது தெரியவில்லை. முகமது நியாஸ் அப்துல் ரஷித்தின் தந்தை துபாயில் இருப்பதாலும், சகோதரிகள் கத்தாரில் உள்ளதாலும் அவர் பிரான்சில் இருந்து அடிக்கடி கத்தாருக்கும், துபாய்க்கும் சென்று வந்துள்ளார்.

மேலூரில் அவரது தாயார் பாத்திமா மட்டும் இருந்திருக்கிறார். அவர் இங்கிருந்து அடிக்கடி கணவரை பார்க்க துபாய் நாட்டுக்கும், மகனை பார்க்க பிரான்சுக்கும் சென்று வந்துள்ளார். 6 மாதத்துக்கு ஒரு மாதம் மட்டுமே மேலூரில் தங்கி இருப்பதாக தெரிகிறது. நேற்று அவர் வீட்டில் இல்லை. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்று இருப்பதாக அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர்.

தீவிரவாத அமைப்பு

கைதான முகமது நியாஸ் அப்துல் ரஷித் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். அவர் படிக்கும்போதே தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்து இருந்துள்ளார். மேலூர் பகுதியை சேர்ந்த அல் உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகளுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுக்கு ஆட்களை சேர்க்கும் வேலையிலும் அவர் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. மேலூரில் முகாமிட்டுள்ள மும்பை போலீசார் முகமது நியாஸ் அப்துல் ரஷித்தின் தாயார் பாத்திமாவை பிடித்து விசாரித்தால், மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: