இலங்கையொரு இந்து நாடு, ஆனால் பௌத்த நாடென்கின்றனர் புத்தராக இவர்கள் வழிபடுபவர் கூட ஒரு இந்துதான் யோகேஸ்வரன்
Thursday, 02 December 2010 13:11
இலங்கையில் 4000 இந்து மதகுருமார்கள் உள்ள நிலையில் பௌத்த மத குருமார்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், கௌரவம் எதுவுமே இவர்களுக்கு வழங்கப்படுவதில்லையெனக் குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யோகேஸ்வரன், தொல்பொருள் திணைக்களத்தில் அதிகாரி தரத்தில் ஒரு இந்து கூட இல்லையென்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இலங்கை ஒரு இந்து நாடு. ஆனால், இவர்கள் பௌத்த நாடு என்று கூறுகின்றனர். இவர்கள் புத்தராக வழிபடுபவர்கள் ஒரு இந்துவாகப் பிறந்தவர்தான். இதுதான் வரலாறு. இதைத்தான் மகாவம்சம் கூறுகின்றது.
முன்னைய காலத்தில் இந்து மன்னர்கள் பௌத்த மதத்தையும் பௌத்த மன்னர்கள் இந்து மதத்தையும் வளர்த்தனர். ஆனால், அந்த நிலைமை தற்போது மாறிவருகின்றது. இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுகின்றன. தொல்பொருள் என்ற பேரில் தமிழ் மக்களின் கலாசார சின்னங்கள் உள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் மதப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் இந்து ஆலய அழிப்புகள், கலாசார இட ஆக்கிரமிப்புகளில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரே ஈடுபட்டுள்ளார்கள். தொல்பொருள் திணைக்களத்தில் ஒரு தமிழர் கூட இல்லை. எனவே இத்திணைக்களத்தில் இந்துக்களையும் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் நடந்த யுத்தத்தினால் பல ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை புனரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதாத நிலையுள்ளதனால் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
1516 இந்து அறநெறிப் பாடசாலைகள் 8130 அறிநெறி ஆசிரியர்களுடன் இயங்கிவருகின்றன. இந்த ஆசிரியர்களுக்கு வேதனம் இல்லை. அவர்கள் தமது பணியை சேவையாகச் செய்து வருகின்றார்கள். ஆனாலும் நீண்ட காலமாகவே இவர்கள் சேவையாற்றி வருவதால் அவர்களுக்கு வேதனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அரச நியமனம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும்.
ஆலயப் புனரமைப்புகளுக்கென நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்த நிதி பிரதேச செயலகங்களுக்கே வழங்கப்படுகின்றன. அவர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் வழங்குகின்றனர். அவர்கள் ஆலய புனரமைப்பை முடியுங்கள் தருகின்றோம் என்கிறார்கள். இதனால் பல சிக்கல்கள், தாமங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆலய புனரமைப்புகளுக்கென ஒதுக்கப்படும் நிதியை நேரடியாக ஆலயத்திடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இலங்கையில் 4000 க்கு மேற்பட்ட இந்த மதகுருமார் உள்ளனர். ஆனால், பௌத்த மத குருமார்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கௌரவம், வழங்கப்படுகின்ற சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. நீதிமன்றங்கள், பஸ்கள், ரயில்கள், பொது இடங்கள், வைத்தியசாலைகளில் பௌத்த குருமார்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை எதுவும் இந்து மதகுருமார்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை பெற்ற யாழ்.சிவன் கோயில், நாச்சிமார் கோவில் ஆகியன வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பாதிக்கப்படப்போகின்றன. இதற்கு அனுமதிக்க முடியாது. வீதி அபிவிருத்தித் திட்டத்துக்கு முன்பாகவே அக்கோயில்கள் தோற்றம் பெற்றன.
எமது ஆலய நிர்மாணப்பணிகளில் ஈடுபட இந்திய கலைஞர்கள் ஆர்வமாகவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும்.
எமது சில இந்து ஆலயங்களில் உயிர்ப்பலிகள் கொடுக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்த உயிர்ப்பலி முறையை தடுக்க அரசு உடனடியாக சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும்.
1 comment:
இலங்கையை மாற்ற இந்தியாவால் தான் முடியும்
Post a Comment