இந்து மத விழிப்புணர்வை ஏற்படுத்த டிச.2 முதல் மட்டக்களப்பில் கருத்தரங்குகள்
Monday, 29 November 2010 14:51
இலங்கை சின்மயா மிஷன் மட்டக்களப்பிலுள்ள சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இந்து மத விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித மேம்பாடும் அதன் விழுமியங்களும் சம்பந்தமான ஆன்மீகக் கருத்தரங்குகளையும் அருளுரைகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆன்மீக கருத்தரங்குகளை நடத்துவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சின்மயா மிஷன் சுவாமி இராமகிருஷ்ணானந்தா மற்றும் இலங்கைச் சேர்ந்த பிரமச்சாரி ஜாக்ரத் சைத்தன்யா அத்துடன் பிரமச்சாரிணி மகிமா சைத்தன்யா ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
நடைபெறவுள்ள இந்த ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளிலும் அருளுரைகளிலும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் இந்து அடியார்கள் கலந்துகொள்வதுடன், இந்தப் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும், மகாஜனக் கல்லூரி மண்டபத்திலும், இந்து ஆலயங்களிலும் நடைபெறவிருப்பதனால், இந்த பயனுள்ள ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வமுள்ள அனைத்து பொது மக்களும் கலந்துகொள்ளலாமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான சின்மயா மிஷன் கிராம மேம்பாட்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகைதரவுள்ள சுவாமிகள் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் 6 ஆம் குறுக்கிலுள்ள சின்மயா மிஷன் மாவட்டக் காரியாலயத்தில் தங்கியிருப்பார்கள். மேலதிக விபரங்களுக்கு 0652225890 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment