Sunday, December 05, 2010

இந்துமத அலுவல்களுக்கென மீண்டும் தனியானதொரு அமைச்சு தேவை விஜயகலா

இந்துமத அலுவல்களுக்கென மீண்டும் தனியானதொரு அமைச்சு தேவை விஜயகலா

Saturday, 04 December 2010 14:46
இந்து மத அலுவல்களுக்கென தனியானதொரு அமைச்சு ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.

மாவட்ட எம்.பி. விஜயகலா மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு

செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசும் போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"முன்னர் இந்து மதம் உட்பட ஏனைய மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. எனது கணவர் (ரி.மகேஸ்வரன்) உட்பட பலரும் இந்து கலாசார அமைச்சுப் பதவியை வகித்திருக்கின்றனர்.

இந்து கலாசார அமைச்சராக இருந்தபோது எனது கணவன் இந்துமதம் தொடர்பிலான பல விடயங்களை செய்திருக்கிறார். எனினும் தற்போது அனைத்து மத அலுவல்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.

ஆகவே, இந்து மத அலுவல்களுக்கு தனியானதொரு அமைச்சு ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இந்து கலாசாரம் தொடர்பில் நிறைய பணிகளை செய்ய முடியும். இந்து கலாசாரத் திணைக்களத்துக்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

வடக்கு,கிழக்கில் யுத்தத்தால் சேதமடைந்த நிறைய இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை இந்து கலாசார திணைக்களத்தினூடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல், வடக்கு,கிழக்கிலுள்ள பதிவு செய்யப்படாத ஆலயங்களைப் பதிவுசெய்ய இந்து கலாசாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்படாவிட்டால் கிடைக்கும் உதவிகள் இல்லாமல் போய்விடும்.

இதேநேரம், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

யாழ்.குடாநாட்டில் கொள்ளைகள் அதிகரித்துள்ளன. முகமூடி அணிந்து வந்து கத்தியைக் காட்டி மிரட்டி வீடுகளில் தங்க நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் கொள்ளையர்கள் பேசுகின்றனர். இந்தக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும். யாழ்குடா நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது அரசாங்கத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

இதேநேரம், வடக்கு,கிழக்கில் வழங்கப்படும் நியமனங்களானது இன விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்' என்றார்

No comments: