Saturday, December 04, 2010

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்

நன்றி தினத்தந்தி

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்
போலீஸ் விசாரணை


சென்னை, டிச.4-

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

மிரட்டல் கடிதம்

இந்து முன்னணியின் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோ நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு கடந்த புதன்கிழமை அன்று மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் இருந்தன. அதோடு மதக்கலவரம் ஏற்படும் என்றும், குண்டுகள் வெடிக்கும் என்றும், இதனால் கட்டிடங்கள் சிதறும் என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுபோல ஏற்கனவே பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதுபற்றி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள கடிதம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி உளவுப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

எழுதியவர் பெயர் இல்லை

பின்னர் இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக புகார் கொடுத்த இளங்கோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், `மிரட்டல் கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்ததாகவும், அதை எழுதியவரின் பெயரும், முகவரியும் இல்லை என்றும், ஆனால் அண்ணா சாலை தபால் அலுவலகத்தில் அந்த மிரட்டல் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த கடிதத்தை சாதாரணமாக கருதாமல் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் தனது பேட்டியில் கேட்டுக் கொண்டார்.

No comments: