முதலில் தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். வேலைப்பளு அதிகம்.
///
சகோதரர் எழிலுக்கு!
//கிறிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//
அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.
///
ஆக ஒரு புத்தகம் இறைவேதம் என்பதற்கு ஆதாரம் அது எளிமையாக, எளியவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் ஆனால் மிக உயர்ந்த தரமாக, உயர்ந்த கருத்துக்களை (பாரதியார் கவிதைகள் போன்று, அல்லது எளிய வார்த்தைகளில் அற்புதமான இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகளை எழுதிய கண்ணதாசன் போன்று) இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பாரதியாரின் கட்டுரை நடையும், கவிதை நடையும் வெவ்வேறானவை. கவிதையில் இருக்கும். பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?
///
//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//
ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?
நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்
நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.
இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.
///
திருக்குறள் பற்றிய ஒரு சிறு விளக்கம். அந்த குறளில் சிவனின் தலையை பற்றி திருக்குறள் பேசவில்லை. சந்திர கிரகணம் வரும்போது, சூரிய கிரகணம் வரும்போது ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன என்பது இலக்கிய கற்பனை. அந்த கவித்துவமான உவமையை இங்கே திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். சந்திர கிரகணம் வரும்போது ஒளி மிகுந்த சந்திரன் மங்கி ஒளி இழப்பதுபோல என் உடல் ஒளி இழந்தது என்று தலைவி சொல்வதாக கவிதை. இதே போல, குரானில் ஒரு கவித்துவ சிந்தனை (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன? கூற மாட்டீர்கள் தானே? அது போல நீங்கள் உபயோகித்த குறள் தவறான உதாரணம். எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட அறிவியல் தவறுகள் திருக்குறளில் ஏதும் இல்லை.
கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.
//'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு // என்று தவறாக குறித்திருக்கிறீர்கள். நான் அப்படி ஒருபோதும்கேட்கவில்லை. நான் இறைதூதருக்கான இலக்கணம் கேட்டேனே அன்றி, குரான் இறைவேதமா என்பதையோ அல்லது முகம்மது நபி இறைதூதரா என்பதையோ நான் கேட்கவே இல்லை. தயவு செய்து இப்னுபஷீர் அவர்களுக்கும் உங்களுக்கும் எழுதிய பதில்களை தயை கூர்ந்து படிக்க வேண்டுகிறேன். எந்த இடத்திலும் நான் ஜனாப் முஹம்மது பெருமானாரை இறைதூதரா என்றோ குரானைப் பற்றியோ கேட்கவே இல்லை. ஏனெனில் அதில் என் அறிவு பூஜ்யம். நீங்கள் கூறுவதை வைத்து அதன் மீது சில கேள்விகள் எழுப்புகிறேன். ஆனால், எனக்கு ஜனாப் முஹம்மது நபி பெருமானார் பற்றியோ அல்லது குரான் பற்றியோ ஏதும் தெரியாது. அதனை நீங்களே என் கேள்விகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கலாம்.
நான் கேட்டதெல்லாம் இதுதான். இறைதூதருக்கான இலக்கணம் என்ன? அதற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
இயேசு காலத்துக்கு முந்திய காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கும்போது இரண்டு மூன்று பேர்கள் தங்களை இறைதூதர் என்று கோரினால், யாரை இறைதூதர் என்று ஏற்றுக்கொள்வீர்கள், ஏன்?
நீங்கள் மீண்டும் குரான் மற்றும் முகம்மது கூறிய அறிவியல் உண்மைகளை குறிப்பிடுகிறீர்கள். இது முன்பு சொன்னது போலவே எனக்கு பிரச்னை. நான் அவற்றை பேச விரும்பவில்லை. ஆனாலும் இறைதூதர் என்ற உதாரணத்துக்கு ஜனாப் முஹம்மது பெருமானாரை காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.
இரண்டாவது இதே போல குரானில் இருப்பதாக குறிப்பிடும் அறிவியல் உண்மைகளைப்பற்றி எனக்கே மாற்றுக்கருத்து இருக்கிறது.
உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். ரோம சாம்ராஜ்யம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பை எடுத்துக்கொண்டால், அவர் இதுபோல முன்னறிவித்து நடைபெறாத ஏதேனும் வாக்கியங்கள் இருக்கும் அல்லவா? (எனக்கு தெரியாது. என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் முஹம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா?
மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அரிஸ்டாட்டிலின் அறிவியல் போதனைகள் இங்கே
http://www.perseus.tufts.edu/GreekScience/Students/Tom/AristotleAstro.html
அதே போல அந்த காலத்தில் வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆணும் பெண்ணும் இருவரும் கொடுக்கும் திரவத்திலிருந்து உயிர் உண்டாகிறது என்றும் கூறியிருக்கிறார் என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே இன்று தெரிந்த ஒரு விஷயத்தை நான் திரும்பச்சொன்னால், அது அற்புதமாகிவிடாது என்று கூறலாமே. (உதாரணமாக நான் ஆணின் விந்துதான் ஒரு குழந்தை ஆணாக பிறக்கிறதா பெண்ணாக பிறக்கிறதா என்பதை நிர்ணயிக்கிறது, அதுவும் கருவுற்ற அந்த வினாடியே அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதும் நிர்ணயமாகிவிட்டது என்று சொன்னால் அது அற்புதம் இல்லை அல்லவா? ஏனெனில் எனக்கு முன்னரே மருத்துவ விஞ்ஞானம் அதனை கூறிவிட்டது.)
///
//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//
அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.
இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.
இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.
இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.
அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.
///
இன்றும் பலர் சுவிசேஷக்கூட்டங்களுக்கு சென்று அற்புதங்களை கண்டு கிறிஸ்துவர்களாக ஆகிறார்கள். அவர்களை கொன்றாலும் பலர் வேறுமதத்துக்கு செல்ல மாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். சுவிசேஷ கூட்டங்கள் இறை ஆசியால்தான் நடைபெறுகின்றன என்று கூறுவீர்களா?
///
//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//
இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.
'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா
உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
///
நபித்துவ முத்திரையான முதுகு நடுவில் புறா முட்டை போன்ற மச்சம் இருக்கும் நபர்கள் எனக்கு வந்த வேதம் என்று கவிதைகள் பொழிந்தால் அதனை இறைவேதம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள்.
ஏறத்தாழ இதனைத்தான் நான் கேட்டேன். இதுவரை வந்த அனைத்து இறைதூதர்களுக்கும் இது போல நபி முத்திரை இருந்தது என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிறிஸ்து, மோஸஸ், ஆபிரஹாம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும்.
மேலும் //உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். //
இஸ்லாம் எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டவர்களுக்கும் பொருந்தி வருமா? குரான் பரிணாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். ஆக குரான் இறைவேதம் அல்ல என்று கூறுவீர்களா?
என்னுடைய கேள்விகளை (ஓரளவுக்கு விதண்டா வாதம் போன்று தோற்றமளிப்பவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய எழுதும் முறையில் உள்ள குறையாக இருக்கலாமே தவிர என் எண்ணத்தில் இல்லை என்று உறுதி கூறுகிறேன்) மதித்து, அதற்கு விளக்கம் அளிக்கும் இனிய சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு என் தாழ்மையான மனம் கனிந்த நன்றிகள்.
என்றும் அன்புடன்
எழில்
----------------------
///
எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!
//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //
இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.
'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.
இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.
கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.
சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.
ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.
///
கேள்வி இறைவனின் படைப்பு பற்றியதல்ல.
கேள்வி கேட்டவர்கள் "முகம்மது நபி இறைதூதர்தானா? அதற்கு என்ன அத்தாட்சி?" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக குரான், அவ்வாறு கேட்பவர்கள் அறியாதவர்கள் என்று சொல்கிறது. இதுதான் பிரச்னை.
வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் அத்தாட்சி கொடுங்கள் என்று கேட்பவர்கள் "அறியாதவர்கள்" என்று அவமானப்படுத்துவது சரியல்ல என்பதுதான் என் எண்ணம்.
///
//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//
நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.
இறைவனே மிக அறிந்தவன்!
///
1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.
2) முஹம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?
3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.
--
நண்பர் சுல்தான் அவர்கள் எனக்கு ஒரு பதில் எழுதியிருக்கிறார்.
//ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.
இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது
//
இல்லை எனக்கு கோபம் வராது. நீங்கள் கூறுவது உண்மைதானே. ஏன்
அமமாதான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று காட்டமுடியும். ஏனெனில் அது அம்மாவுக்குத்தான் தெரியும்.
அதே போல இறைவன் தான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் இறைதூதர் என்று காட்ட முடியும். ஏனெனில் அது இறைவனுக்குத்தான் தெரியும்.
//
'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.
//
அப்போதும் அம்மாவின் வாக்குமூலம் நம்பத்தகுந்ததுதானே? அம்மா ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று கூறாத வரையில், யார்வந்து நான் தான் உன் தந்தை என்று கூறினாலும், ஆதாரம் என்ன என்று கேட்க மாட்டோமா? யார் வந்து சொன்னாலும், அவரை தந்தை என்று ஒப்புக்கொள்வோமா?
--
இன்னொருவர் அவரது பதிவில் அவரது பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்று குறை கூறியிருந்தார். அது ஆபாசமில்லைதான். ஆனால், மிகுந்த ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் எழுதும், அக்கறையுடன் எனக்கு பதில் எழுதும் சகோதரர்கள் அபுமுஹை, சுவனப்பிரியன், இப்னுபஷீர் ஆகியோரையும் சேர்த்து அது அவமதிக்கிறது. அது சரியல்ல என்பதால் அதனை அனுமதிக்கவில்லை.
--
என் கேள்விகளுக்கு பொறுமையாக நாகரிகமாக பதில் எழுதும் இனிய சகோதரர் அபுமுஹை, இனிய சகோதரர் இப்னுபஷீர், இனிய சகோதரர் சுவனப்பிரியன் ஆகியோருக்கு தாழ்மையான நன்றிகள்
அன்புடன் எழில்