இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதற்காக புது வித யுக்திகளை கையாளும் தலிபான்கள்
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 05:17.45 மு.ப GMT ]
சர்வதேச பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கம் இப்போது இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக பாகிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய மதத்தலைவர்களான மெளலவிகள் மூலம் இளைஞர்கள் மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கராச்சியில் நான்கு பயங்கரவாதிகளை பொலிசார் கைது செய்தனர். இவர்களில் இரண்டு பேர் தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் தலிபான் அமைப்பு தெஹ்ரீக் இ தலிபான் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க மெளலவிகள் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்கள் தொழுகைக்கு வரும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களிடம் பேச்சு கொடுத்து பின்னர் படிப்படியாக பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து விடுகின்றனர்.
இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் வஜிரிஸ்தான் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோர் அனைவருமே தற்கொலைப்படை தீவிரவாதிகளாகின்றனர்.
இது தவிர இளைஞர்கள் சிலர் கட்டாயமாக கடத்தப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்க்கப்படுவதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தெஹ்ரீக் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வக்கார், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக வெளியான புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து பொலிசார் சோதனை மேற்கொண்டு இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நான்கு நாள் காவலில் வைக்குமாறு கூறினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை உயரதிகாரி பயாஸ் கான் தெரிவித்தார்.
இவர்களிருவர் கைது செய்யப்பட்ட விவரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் உயர் அதிகாரி செளத்ரி அஸ்லாம் பொலிசார் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்க தலிபான் தீவிரம் காட்டி வருவது புலனாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தலிபான் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரமும் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து 20 கிலோ எடையுள்ள வெடிமருந்துப் பொருள்கள், 20 அடி நீளமுள்ள டெட்னேட்டர் வயர்கள், 2 கையெறி குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்கள், வெடிகுண்டு செய்வதற்குத் தேவையான பொருள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சி.ஐ.டி அலுவலக வளாகத்தில் குண்டு வைத்த சம்பவத்தில் இவர்களிருவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக செளத்ரி தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வக்கார் அகமது, அர்ஷத் கான், அப்துல் ரஸாக் மற்றும் இவர்களுக்கு உதவி செய்தவர், ரஷீத் இக்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிராண்டியர் காலனி எனுமிடத்தில் உள்ள இடுகாட்டில் இவர்கள் பதுங்கியிருந்தனர்.
வாலி மெஹ்சூத் தலைமையில் தான் செயல்பட்டதாக பொலிசாரிடம் ரஸாக் தெரிவித்தார். தற்கொலைப் படை தாக்குதலை நிறைவேற்றுவதில் முக்கியமானவராகக் கருதப்படும் கியாரி ஹுசேனுக்கு அடுத்த தலைவர்தான் வாலி மெஹ்சூத். இளைஞர்களை இயக்கத்தில் சேர்ப்பதில் அதிக முயற்சியெடுத்தவர் ஹுசேன்.
இளைஞர்களை தற்கொலைப் படை பயங்கரவாதியாக மாற்ற பயிற்சி அளிப்பது, குறிப்பிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்த குறி வைப்பது, மிரட்டி நிதி சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கும் இளைஞர்களை பயன்படுத்தியுள்ளார். 2009ம் ஆண்டில் இவரால் கடத்தப்பட்ட 6 இளைஞர்கள் வஜிரிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் நான்கு பேரான இபாதுல்லா, ஆரிப், அப்துல் காதிர், ஹஸ்ரத் அலி ஆகியோர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். 22 வயதான வக்கார் அகமதுவுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது சகோதரர் மருத்துவமனையில் பணி புரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment