அகதி, ஏழை என்ற சொற்களை நீக்கி வேறுபாடுகளின்றி இந்துக்கள் சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் நல்லை ஆதீன முதல்வர்
Monday, 30 May 2011 12:55 Hits: 4 . .யாழ்நகர் நிருபர் : இந்து மதம் ஏனைய மதங்களைப் போன்று உரிமை பெற்ற மதமாக விளங்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இதற்கு இந்து மாமன்றம் உதவ வேண்டுமென்றும் தெரிவித்தார். பல்வேறு துன்பப்பட்ட எம் மக்களிடத்தே அகதி,ஏழை என்ற சொல்லை நீக்கி எந்த வித பேதமுமில்லாமல் தலை நிமிர்ந்து வாழும் சமூகமாக மாற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்த சிவத் தொண்டர் மாநாடு நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமான போது ஆசியுரை வழங்குகையிலைலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தனது ஆசியுரையில்;
இன்றைய புனித நாளில் பல சிறப்புக்களினைக் கொண்ட இந்த நல்லூரான் புனித பிரதேசத்தில் எல்லோரும் ஒன்று கூடி இருப்பது எமது இந்து சமயத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. நாம் என்ன செய்கிறோம் இனி என்ன செய்ய வேண்டுமெனக் கூறும் இந் நாளினை நாம் வரவேற்கின்றோம்.இலங்கையின் பல திசைகளிலிருந்தும் தமது மதத்தினை பிரதிபலிக்கும் நோக்கில் வந்திருப்பது பெருமைக்குரியது.
இங்கு எல்லோரையும் ஒன்று திரட்டி எழுச்சியாக எமது பாரம்பரியக் குதிரை நடனத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தது மதத்தின் பெருமையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. குறிப்பாக எமது மதம், மொழி, பண்பாடு,செயற்பாடு என்பனவற்றினைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் நாம் உள்ளோம். இளம் சமுதாயத்தினர்.இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
யாழ்.மண்ணின் தமிழ்ப் பண்பாட்டினைக் காண்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே நாம் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்துச் செயற்பட வேண்டும். ஏனைய மதத்தினர் தமது உடைகள் மூலம் தம்மை பிரதிபலிக்கின்றனர்.ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டு இருக்கிறோம். எமது மதத்தினை நாமே பிரதிப்பலித்துக் காப்பாற்ற வேண்டும்.
நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம். என்பதற்காக வேறுபாடு காட்டக்கூடாது. அதிலும் அகதி ஏழை என்ற சொல்லினை நீக்க வேண்டும்.இதற்காக இந்து மாமன்றம் பாடுபட்டு வருகிறது. எனினும் இதன் பணி சகல தேசத்திலும் பரவலாகப் பெருகி நமது அடையாளங்களை நாமே பாதுகாத்து தலை நிமிர்ந்து வாழும் சமூகமாக மாறவேண்டும். ஏனைய மதங்களினைப் போன்று உரிமை பெற்ற மதமாகவும் அச்சமில்லாதவர்களாக இந்துக்கள் வாழ வேண்டும்.இதற்கு இந்து மாமன்றம் உதவ வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
1 comment:
நல்ல கருத்து
Post a Comment