Friday, December 26, 2008

மலேசியாவில் மேலும் ஒரு இந்து கோவில் இடிக்கப்பட்டது இந்துக்கள் எதிர்ப்பு

மலேசியாவில் மேலும் ஒரு இந்து கோவில் இடிக்கப்பட்டது இந்துக்கள் எதிர்ப்பு


கோலாலம்பூர், டிச.4-


மலேசியாவில் வழிபாட்டு தலங்களை இடிப்பதற்கு தடை இருந்தபோதிலும் கோலாலம்பூர் நகரில் உள்ள இந்து கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தடை சட்டத்தை மீறி

மலேசியாவில் இந்து கோவில்களை இடித்து தள்ளியதால் ஆத்திரம் அடைந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு, வழிபாட்டு தலங்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் அதை இடிப்பதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் இருந்தபோதிலும் இப்போது ஒரு இந்து கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கோலாலம்பூரில் டாமன்தேசா என்ற இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு இந்து கோவில் இருந்து வந்தது. இதில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த கோவிலை இடிப்பது என்று முடிவு எடுத்து கோலாலம்பூர் நகர் மன்ற அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்த நோட்டீஸ் கோவில் சுவற்றில் ஒட்டப்பட்டது. கோவில் நிர்வாகிகளிடம் நேரடியாக கொடுக்கப்படவில்லை.

எதிர்ப்பு

நோட்டீசை பார்த்ததும் அதை தடுக்க முயற்சிகள் எடுத்துவரும் நிலையில் கோவில் இடித்து தள்ளப்பட்டது. இது அந்த நகரில் வாழும் இந்துக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் சாமிவேலுவும் தடையை மீறி எப்படி இந்து கோவிலை இடித்துத்தள்ளலாம்? என்று நகரமன்ற நிர்வாகிகளிடம் கேட்டார். இந்த பிரச்சினையை பிரதமர் படாவியின் கவனத்துக்கு கொண்டுபோகப்போவதாகவும் அவர் எச்சரித்தார்.

மலேசிய அரசில் பிரதேச துறை துணை மந்திரி சரவணனும் கோவில் இடிக்கப்பட்டதால் வருத்தம் அடைந்தார். இந்த பிரச்சினையை நேற்று தன் இலாகாவின் மூத்த மந்திரியான சுல்ஹாசன் ரபீக் கின் கவனத்துக்கு கொண்டு சென்றார். எங்கள் அமைச்சரகத்துக்கு 2 நாள் அவகாசம் கொடுங்கள். நான் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்கிறேன் என்றும் அவர் கூறினார்.

No comments: