விவசாய நிலம் வாங்கும் திட்டம்:
இந்து ஆதிதிராவிட பெண்கள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்,டிச.17-
விவசாய நிலம் வாங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்கு, இந்து ஆதி திராவிட பெண்கள் வருகிற 26-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.
விவசாய நிலம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய பட்டியல் இனத்தோர் மேம்பாட்டுக்கழகத்தின் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ், இந்து ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்குவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்) மூலமாகவோ, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொண்டோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மகளிர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்குள் இருத்தல் அவசியம். நிலமற்ற விவசாய கூலி, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும்.
மூல பத்திர நகல்
கிராமப்புறமாக இருந்தால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.18,460-ம், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.28,536-ம் மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
இதில் தாட்கோ மானியம் 50 சதவீதமும், பருவக்கடன் 50 சதவீதமும் அடங்கும். ஏற்கனவே தாட்கோ உதவியுடன் விவசாய நிலம் வாங்கியிருந்தால், தற்போது நீர்ப்பாசனம் மற்றும் நில அபிவிருத்திக்காகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ், வருமானச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றின் நகல் களை இணைக்க வேண்டும்.
மேலும் வாங்க விரும்பும் நிலத்தினை பயனாளியே தேர்வு செய்து நில சொந்தக்காரருடன் விலை பேசி ரூ.20-க் கான பத்திரத்தில் வாங்கும் நிலத்திற்கான சிட்டா, அடங்கல், பட்டா புத்தகநகல், வரைபடம், வில்லங்க சான்று, மூலபத்திர நகல், மற்றும் சட்ட ஆலோசகர் கருத்து ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். நிலம் கொடுக்கிறவர் ஆதி திராவிடராக இருத்தல் கூடாது. பிற இனத்தை சார்ந்தவரிடமே நிலம் வாங்கப்பட வேண்டும்.
26-ந்தேதி கடைசிநாள்
வாங்க உத்தேசித்துள்ள நிலத்துக்கு சந்தை மதிப்பீடு அல்லது அரசு வழிகாட்டி மதிப்பீடு இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் தவிர, பிற ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலம் வாங்குகிறவர்கள் ஏற்கனவே நிலத்தில் கிணறு மற்றும் போர்வெல் ஆகிய நீர்ப்பாசன வசதி உள்ள நிலமாக தேர்வு செய்ய வேண்டும்.
நிலமற்ற விவசாயி மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் 75 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். எனவே இந்த திட்டத்துக்கான விண்ணப்பத்தினை வருகிற 26-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து, திண்டுக்கல் மாவட்ட வளாகத்திலுள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்துக்கு நேரிலோ தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment