Friday, December 26, 2008

இந்து யாத்திரைகளுக்கும் சலுகை வேண்டும்!: வருங்கால முதல்வர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை



இந்து யாத்திரைகளுக்கும் சலுகை வேண்டும்!: அர்ஜுன் சம்பத்

உலகெங்கிலுமுள்ள கோடானுகோடி இந்துக்கள் தங்கள் வாழ்நாள்களில் அவரவர் வசதி, வாய்ப்புகளுக்கேற்ப தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபடுவதற்காகவும், ஆன்மிக அனுபவங்களைப் பெறுவதற்காகவும் தங்களின் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் பலமுறை திருத்தலப் புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டின் ஆன்மாவாக நமது புண்ணியத்தலங்கள் விளங்குகின்றன. வடக்கே இருப்பவர்கள் ராமேசுவரத்துக்கு வந்து புனித நீராடுவதையும் இறைவனைத் தரிசனம் செய்வதையும் தங்கள் வாழ்நாளில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

தெற்கே இருக்கக்கூடிய நாம் வடக்கிலுள்ள காசிக்குச் செல்வதையும், கங்கையில் நீராடுவதையும் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்.

ஒரு சிவ பக்தன் பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களைத் தரிசனம் செய்ய யாத்திரை தொடங்கினால், ராமேசுவரம் முதல் கேதார்நாத் வரை இந்தியா முழுவதையும் சுற்றி வரவேண்டும்.

வைஷ்ணவ பக்தன் தம் வாழ்நாளில் 108 திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டால் தமிழகத்தில் தொடங்கி இமயமலையில் உள்ள முக்திநாத் வரை பாரத நாடு முழுமையும் சுற்றி வரவேண்டும்.

சக்தி (அம்மன்) வழிபாடு மேற்கொள்பவர்கள் 52 சக்தி பீடங்களுக்குச் சென்று வரவேண்டுமானால் இந்தியா முழுவதும் சென்று வரவேண்டும்.

ஆகவே, இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டின் அச்சாணி நமது திருத்தலங்களுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதில்தான் இருக்கிறது.

தமிழகத்து இந்துக்கள் மேற்கொள்ளும் யாத்திரைகளில் மிக முக்கியமானது காசி யாத்திரை, முக்திநாத் யாத்திரை, திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை, 12 ஜோதிர்லிங்க யாத்திரை, வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை, சபரிமலை யாத்திரை, ராமேசுவரம் யாத்திரை என பலவகையாகும்.

தமிழகத்துக்குள் பழனி மலை, திருச்செந்தூர் என அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயிலுக்கு யாத்திரை இப்படி பல்வேறுவிதமான புனிதப் பயணங்களை மேற்கொள்கிறார்கள்.

பழங்காலத்தில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நமது தேசத்தை ஆண்ட மன்னர்களும், வசதி படைத்தவர்களும் அன்ன சத்திரங்களையும், தண்ணீர்ப் பந்தல்களையும், நல்ல சாலை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை தங்களது பாக்கியமாகவும், கடமையாகவும் கருதிச் செயல்பட்டார்கள் என்பது வரலாறு. புண்ணியத் தலங்களில் யாத்திரீகர் தங்குவதற்கு உரிய வசதிகளையும், யாத்திரீகர்களுக்கு உணவு அளிப்பதற்கும் நல்ல ஏற்பாடுகளை நமது முன்னோர்கள் செய்து வைத்துள்ளார்கள். ஆனால், தற்போது புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆளுகின்ற அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை என்பது நடைமுறை உண்மையாகும்.

பொதுவாக தற்போது நடந்தும், வாகனங்களிலும், ரயில் மூலமும், விமானம் மூலமும் யாத்திரைகளை மேற்கொள்கிறார்கள். பாதயாத்திரையாகச் செல்பவர்களுக்கு அரசும், பொது நிர்வாகமும் எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை. தங்குமிடம், உணவு, தண்ணீர், முதலுதவி, சுகாதாரம் உள்ளிட்ட எந்த வசதிகளும் பாதயாத்திரை செல்பவர்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை.

வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு இடங்களில் பலவகையான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்லும்போது நுழைவு வரி, மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் சுங்க வசூல் கட்டணம், புண்ணியத்தலங்கள் உள்ள கிராமங்களுக்குள் செல்ல நுழைவுக் கட்டணம், புண்ணியத்தலங்களுக்குச் சென்றவுடன் வாகன நிறுத்த கட்டணம் என இப்படி பல இடங்களுக்கு வாகனங்களில் செல்லும் யாத்திரீகர்கள் ஏராளமான செலவு செய்ய வேண்டியுள்ளது.

சிறப்பு பேருந்துகள் திருவிழாக் காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டால் அதற்கு இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டால் அங்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி இந்துக்கள் எந்த வழியில் யாத்திரை மேற்கொண்டாலும் போக்குவரத்துக்காக ஏராளமான செலவு செய்ய வேண்டியுள்ளது.

புண்ணியத் தலங்களில் தங்குமிட வசதிகள், குடிநீர், சுகாதார, முதலுதவி வசதிகள் பக்தர்களுக்கு முறையாகச் செய்து தரப்படுவதில்லை. கோயில்களிலும் அனைத்து விதமான வழிபாட்டு முறைகளிலும் இறைவனைத் தரிசனம் செய்வதற்கும் பல வகையான கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்கமே ஓங்கி நிற்கிறது.

இப்படி பெரும்பான்மையான இந்துக்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களுக்கு பலவிதமான இடையூறுகள் உள்ளன. குறிப்பாக, திருக்கயிலை மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென்றால் முதலில் இந்திய அரசாங்கத்திடம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் அனுமதி பெற வேண்டும். பிறகு சீன அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். நேபாளம் வழியாகச் செல்பவர்கள் நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்.

கயிலாயம் 1963-ம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. சீன அரசாங்கம் எந்த ஒரு வசதியும் அங்கு செய்து தருவதில்லை. வெங்கடேஸ்வரன் என்பவர் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது சீன அரசு கயிலையைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கயிலை பகுதியில் தகவல் கோபுரம் ஒன்றை அமைக்க முன்வந்தது. பாதி செலவுகளை சீன அரசு ஏற்றுக்கொள்வதாகவும், மீத செலவை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தைக் கோரியது. வெங்கடேஸ்வரனும் அதற்கான முயற்சியை செய்தார்.

ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தவர்கள் மேற்கொள்ளும் யாத்திரைக்கு மத்திய அரசு செலவு செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் சொல்லி கயிலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உதவி செய்ய மறுத்தது. திருக்கயிலாயம் சென்று வருபவர்களுக்கான விதிமுறைகளும், நடைமுறைகளும் ஆண்டுதோறும் மேலும் மேலும் கடுமையாக்கப்படுவதோடு, செலவினங்களும் மிக அதிகரித்து வருகின்றன.

அதேநேரத்தில் மதச்சார்பற்ற இந்திய நாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு வகையில் உதவி செய்வதோடு நிதி உதவியும், மானியமும் கொடுத்து வருகின்றன.

ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாமியர்களின் புனிதமான மதக்கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் யாத்திரை என்பது அரபு நாட்டிலுள்ள மெக்கா, மதினா ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்புவதாகும். இதற்கு தேவையான விமானங்களை அரசாங்கம் மிக தாராளமாக இயக்குகிறது. விமானக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகளை இந்தியாவிலும், அரபு நாட்டிலும் தாராளமாக மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்கின்றன.

ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவர்களுக்கான நிதி உதவித் தொகையும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதற்காக ரூ. 250 கோடி மத்திய அரசாங்கத்தால் செலவு செய்யப்பட்டது. ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு உதவுவதற்காக மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி நிதி ஒதுக்கி, அமைச்சர்களே நேரில் சென்று சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்கள்.

இதேபோல் அண்மையில் ஆந்திர மாநில அரசு கிறிஸ்துவ சகோதரர்கள் மேற்கொள்கின்ற புனித யாத்திரைக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் புனிதத் தலமாகக் கருதும் ஜெருசலம், பெத்தலகேம் ஆகிய வெளிநாட்டில் உள்ள ஊர்களுக்குச் சென்று வருவதற்கு ஆந்திர காங்கிரஸ் அரசின் முதல்வர் சாமுவேல் ராஜசேகரரெட்டி நிதியுதவி வழங்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தாராளமாக இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் யாத்திரைகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டு நாம் வருத்தப்படவில்லை. ஆனால் அதேநேரத்தில் இத்தகைய உதவிகள் பெரும்பான்மை மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

சில மாநில அரசுகள், குறிப்பாக கர்நாடக அரசு கயிலாய மானசரோவர் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை உதவி செய்கிறது. இதேபோல் குஜராத் அரசும் இத்தகைய உதவியைச் செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கயிலாய யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து கயிலாய யாத்திரை மேற்கொள்பவர்கள் சில நூறு மட்டுமே.

கயிலாய யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஒருவர் கோரிக்கை வைத்தபோது முதல்வர் கருணாநிதி அவருக்கே உரிய பாணியில் இந்த சிறிய வயதில் கயிலாயம் செல்வதற்கு உதவ மாட்டேன் என்று கேலியாகப் பதிலளித்தார்.

ஆனாலும் திருக்கயிலாயம், முக்திநாத் செல்பவர்களுக்கு அண்டை மாநில அரசுகள் உதவி செய்வதுபோல தமிழக அரசும் உதவி செய்திட வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் எழுப்பப்படுகிறது.

இந்த நியாயமான கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளுமா? திருத்தல யாத்ரீகர்களிடம் பணம் பிடுங்கும் நிலைமை மாறி, அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க அரசு முன்வருமா? இந்தக் கேள்விகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

இன்று மாநாடு: தமிழக தெய்வீகப் பேரவை சார்பில் அனைத்து குருமகா சன்னி

தானங்களும் சைவ ஆதீனங்களும் வைணவ

ஜீயர்களும் மடாதிபதிகளும் அடியார் பெருமக்களும் பங்கேற்கும் கோரிக்கை மாநாடு வியாழக்கிழமை (25.12.2008) சென்னையில் நடைபெறுகிறது. இந்து யாத்ரீகர்களுக்கும் உதவி

செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாநில முதல்வர், ஆளுநர் ஆகியோரைச் சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: