Thursday, January 01, 2009

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த திமுக செயலாளர் வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை (பி.டி.ஓ) கன்னத்தில் அறைந்த திமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கோலப்போட்டி பொங்கலை முன்னிட்டு நடந்தது. இதில் 50 குழுக்களைச் சேர்ந்த 500 பெண்கள் பங்கேற்றனர்.

விருபாட்சிபுரம் செல்லியம்மன் மகளிர் குழு, முதல்வர் கருணாநிதி படத்துடன் உதயசூரியன் படத்தையும் கோலமாக வரைந்துள்ளனர்.

இதைக்கண்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுமணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சியின் தேர்தல்சின்னம் வரைய அனுமதிக்கலாமா? என்று பிடிஓ தமிழ்ச்செல்வியிடம் புகார் கூறினார்.





உடனே பிடிஓ தமிழ்ச்செல்வி, அக்கோலத்தை பார்த்து, தமிழக முதல்வர் படம் இருக்கட்டும், தேர்தல் சின்னம் வரையக்கூடாது என்று கூறி அதை அழித்துவிடுமாறு கூறியிருக்கிறார். அதற்கு ரூ.100 செலவானது என்று பெண்கள் கூறவே அதை கொடுத்து விடுகிறேன் என்று அதிகாரி கூறியதும் கோலம் அழிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அணைக் கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, பிடிஓவை வாய்க்கு வந்தபடி, தரக்குறைவாக பேசியுள்ளார். பின்னர் கோபமாக அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி தமிழ்ச்செல்வி அப்படியே நிலை குலைந்து போனார். பின்னர் எதுவும் பேசாமல், அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்.

பாபுவுடன் வந்த அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வியின் அறைக்குச் சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர், போன்ற பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கோப்புகளையும் கிழித்து எறிந்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரி தமிழ்ச்செல்வி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனராம்.

தற்போது மாவட்ட ஊராட்சி திட்ட உதவி அலுவலர் மற்றும் இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

No comments: