Thursday, January 01, 2009

காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் இதுவரை 345 பேர் பலி


காஸா மீது இஸ்ரேலின் கொடும் தாக்குதல் நீடிப்புசெவ்வாய்க்கிழமை,
டிசம்பர் 30, 2008, 11:08 [IST]


காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று நடந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்களையும், பிற இலக்குகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதால் காஸா நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.

கடந்த பல வருடங்களில் நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

புதிய தாக்குதலில், காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஐந்து கட்டடங்களை இஸ்ரேல் விமானப்படையினர் குறி வைத்துத் தாக்கி தகர்த்தனர்.





இதுகுறித்து காஸா நகர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தலைவர் முவையா ஹஸனீன் கூறுகையில், பல பாதுகாப்பாளர்கள், பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான ஒரு விளையாட்டு மையம், இரண்டு பயிற்சி முகாம்கள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன என்றார்.

இதுவரை நடந்த தாக்குதல்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காஸா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 62 பேர் அப்பாவி பொதுமக்கள் என ஐ.நா. தகவல் ஒன்று கூறுகிறது.

காஸாவுக்கும், இஸ்ரேலின் அஸ்தாத் என்ற நகருக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலி்ல ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டார். இதையடுத்தே தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.

ராணுவம் இறங்குகிறது:

மேலும், இதுவரை வான் ரீதியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்து ராணுவத்தை உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தவும் தீர்மானித்துள்ளது. இதனால் காஸா நகரம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

இன்று நடந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரது இல்லமும் குறி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்பதால் உயிர் தப்பினார்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ், கடந்த 2007ம் ஆண்டு காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸுக்கு விசுவாசமான பாதா படைகளை விரட்டியடித்தது.

அது முதல், இஸ்ரேலிய படைகள் மீது அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ஹமாஸ். இதையடுத்து பதிலடியாக இஸ்ரேலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல்.

நான்கு நாட்களாக நடந்து வரும் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா கண்டனம்

இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவத் தாக்குதலின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

No comments: