Wednesday, June 22, 2011

காத்தான்குடியில் தாலிபான் தர்பார்.

முஸ்லிம் கிராமமான காத்தான்குடியில் கட்டப் பஞ்சாயத்தா அல்லது தலிபான் தர்பாரா? ஆபாசப் படம் பார்த்த இரு பெண்களைத் தண்டிக்க முயன்றபோது பொலிஸாரால் காப்பாற்றப்பட்டனர்

[Wednesday, 2011-06-22 17:19:01]


பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கு பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற இரு மாணவிகள், அங்கு ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விரு மாணவிகளையும் பின்தொடர்ந்துள்ள இளைஞர்கள் சிலர், 'நீங்கள் ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்தீர்கள் தானே?' என்று கூறி அவ்விரு மாணவிகளையும் பலவந்தமாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி, காத்தான்குடியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்த மேலும் சிலர், அம்மாணவிகளிடம் நீங்கள் ஆபாசத் திரைப்படம் பார்த்தீர்கள் தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களைத் தாக்கியும் உள்ளனர்.

அதன்பின் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலகக் கட்டிடத்துக்கு மேற்படி இரு மாணவிகளும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுமார் 350பேர் கொண்ட பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி சம்மேளனத்தின் பிரதிநிதியொருவரிடம் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டு அம்மாணவிகள் செய்த தவறுக்காக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டுள்ளனர்.

மேலும், குறித்த மாணவியர் இவ்வாறானதொரு தவறை புரிந்துள்ளார்கள் என்றும் அனைவரும் வந்து அவர்களின் முகத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் அனைவருக்கும் மேற்படி நபர்களினால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களை அங்கிருந்து அகற்றுமாறு பள்ளிவாசல் சம்மேளனத்திடம் கோரியுள்ளனர். இருப்பினும் அதனை தங்களால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் அதிகாரத்தில் அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறியுள்ளது.

இதனையடுத்து பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் உடன் நடவடிக்கை எடுத்த நான், பிரதேசத்தை அண்டிய அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் சுமார் 150 பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தேன்.

லத்திகளுடன் அவ்விடத்துக்கு பொலிஸார் குவிந்ததைப் பார்த்த பிரதேசவாசிகள் தங்களைத் தாக்கவே பொலிஸார் வந்துள்ளனர் என்று எண்ணி அவ்விடத்திலிருந்து ஓடியதுடன் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதலையும் நடத்தினர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் பொலிஸார் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரதேசத்தின் நிலைமையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து குறித்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments: