Tuesday, February 05, 2008

நெல்லை பிஷப்புக்கு சரமாரி அடி, உதை - கார் உடைப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008

நெல்லை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் இன்று நடந்த குருமார்கள் ஆலோசனை கூட்டத்தில் சிஎஸ்ஐ பிஷப் ஜெயபால் டேவிட் சராமரியாக தாக்கப்பட்டார். அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை டயோசீசன் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஏடிஜேசி தினகர், வேதநாயகம் அணிகளுக்கு இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. தேர்தல் தொடர்பாக இரு அணியினரும் பல்வேறு நீதிமன்றங்களில் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் டயோசீசன் அனைத்து சேகர குருமார்கள் கூட்டம் கதீட்ரல் ஆலயத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிஷப் ஜெயபால் டேவிட் காலை 10.30 மணியளவில் அங்கு காரில் வந்தார்.

அப்போது சிலர் கும்பலாக திரண்டு வந்து குருமார்கள் கூட்டத்தை நடத்த பிஷப்புக்கு தகுதி இல்லை. தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கதீட்ரல் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த சேர் மற்றும் மைக்குகளை அடித்து உடைத்தனர்.

இதை தட்டிக் கேட்ட சில பாதிரியார்களும் தாக்கப்பட்டார்கள். அப்போது அங்கிருந்த பிஷப் ஜெயபால் டேவிட்டின் அங்கியை பிடித்து இழுத்து தாக்கினர். அவரது முகத்தில் குத்து விழுந்தது. பின் பக்கம் நின்ற சிலரும் அவரை தாக்கினர். இதில் அவரது அங்கி கிழிந்தது. இந்த கலவரத்தில் ஜெயபால் டேவிட் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது. கார் டிரைவர் பாக்கியநாதனையும் அவர்கள் தாக்கினர்.

இதையடுத்து இரு அணியை சேர்ந்தவர்களும் ஓருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கதீட்ரல் ஆலயம் போர்களம் போல் காட்சியளித்தது. குருமார்கள் சிலர் பிஷப்பை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

தகவல் அறிந்ததும் பாளை இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். அதன்பிறகு அனைவரும் ஆலயத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதாக மேலசெவலைச் சேர்ந்த செல்வராஜ், ஏமன்குளம் குணபால்ஜெசிங், முக்கூடல் பால்பாலசிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கு குருமார்கள் கூட்டம் நடந்தது. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

--
நன்றி தட்ஸ்டமில்

கருணை பொங்குதே என்று கூச்சல் மட்டும்தான் இருக்கும்போல. கருணை அப்புறம் காணாமல் போயிடும் போல.

No comments: