Wednesday, December 14, 2011

இலவச கட்டாய கல்வி விதிமுறையை எதிர்த்து சிறுபான்மை )கிறிஸ்துவ) பள்ளிகள் வழக்கு !



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பாக பாதிரியார் செபாஸ்டியன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பித்து வருகிறோம். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இதனால் எங்களது பள்ளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். 150 மாணவர்கள் இருந்தால் தான் தலைமை ஆசிரியர் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி 8ம் வகுப்பு வரை 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறுகிறார்கள். இது நடைமுறை சாத்தியமல்ல.

மிச்சமுள்ள 75 சதவீத மாணவர்களிடமும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்து. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்தக் கமிட்டியில் பள்ளி சார்பாக ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்ற இடங்களில் பெற்றோர்கள், அந்தப்பகுதி கவுன்சிலர்கள் இடம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு கமிட்டி அமைத்தால் பள்ளியின் நிர்வாகம் அந்த கமிட்டி வசம் சென்றுவிடும். பள்ளி நடத்துபவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் என அனைத்தும் அந்த கமிட்டிவசம் சென்றுவிட்டால், சிறுபான்மை பள்ளிகளுக்கு எந்த அதிகாரமும் மிஞ்சாது. மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது. எனவே இந்த சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் சேவியர் அருள்ராஜ், தமிழக அரசு சார்பாக கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய் காந்தி ஆஜரானார்கள்.

No comments: