கேரள முதல்வரின் கோரிக்கைக்கு பிரதமர் மவுனம்
புது டெல்லி, டிச.3 - கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது குறித்து வலியுறுத்தி பேசினார். ஆனால் இது குறித்து அவர் எந்தவிதமான பதிலையும், உத்தரவாதத்தையும் தராததால் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளாராம். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசுவதற்காக டெல்லி சென்றார்.
முதலில் சோனியாவை சந்தித்து பேசிய அவர், கேரள மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் கேரளா, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கவில்லை. அதே சமயம் 116 ஆண்டு பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் புதிய அணை கட்டுவதுதான் நல்லது என்று அவர் சோனியாவிடம் வலியுறுத்தினார்.
பின்னர் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் உடனிருந்தார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று உம்மன் சாண்டி பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் பிரதமர், கேரள முதல்வருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்கவில்லை. மாறாக அவர் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டாராம்.
முன்னதாக, டெல்லியில் நிருபர்களை சந்தித்த உம்மன் சாண்டி கூறுகையில்,
அணை இருக்கும் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், கேரள மக்களின் பாதுகாப்பு பற்றியும்தான் எங்களுக்கு கவலையாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று நாங்கள் எப்போதுமே கூறியதில்லை. இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment