Sunday, March 04, 2012

கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு


கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு


புதுச்சேரி : நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்,45, பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம், நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ், பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.
இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர்.
தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர்.
தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார்.
இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், "தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார்.
ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: