Monday, September 24, 2007

போலீஸ் பாதுகாப்புடன் திமுக ஆட்கள் பாஜக இந்துமுன்னணி அலுவலகத்தை தாக்கும் காட்சிகள்


பா.ஜ., இந்து முன்னணியை கண்டித்து தி.மு.க., திடீர் போராட்டத்தால் பதட்டம்



சென்னை: முதல்வர் கருணாநிதி தலையை துண்டிக்க வேண்டும் என்று பேசிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னையில் தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க.,வினர் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்து முன்னணி தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் முன் ஏராளமான தி.மு.க.,வினர் கொடிக் கம்புகளுடன் கூடினர். அமைச்சர் பரிதிஇளம்வழுதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம், மாவட்ட செயலர்கள் அன்பழகன், பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ., சைதை கா.கிட்டு உள்ளிட்ட தி.மு.க., பிரமுகர்கள் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கூடினர். கமலாலயம் முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழக பா.ஜ., கட்சி பொதுச் செயலர் குமாரவேலு, துணை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உட்பட 50 பேர் திரண்டு வந்தனர். போலீசார் கேட்டு கொண்டதால் அவர்கள் அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது 50 பேர் உருட்டுக்கட்டைகள், கம்புகள், கற்களுடன் ஓடிவந்தனர். பா.ஜ., அலுவலகத்திற்குள் புகுந்தனர். கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள், மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இரண்டு மோட்டார் சைக்கிள்களை நாசப்படுத்தினர். உள்ளே இருந்த பா.ஜ.,வினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில், 3 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.,வினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்கள் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. பின்னர் தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.

இந்து முன்னணி அலுவலகம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகம் மீது தி.மு.க., தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ்காரர் விஜயன் காயமடைந்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட சோடா மற்றும் பீர் பாட்டில்கள் வீசப்பட்டன. தாக்குதலை சமாளிக்க அலுவலகத்தின் முன்புற கதவை இந்து முன்னணியினர் மூடினர். எனினும் அலுவலகத்தின் முன்புறத்தில் இருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணி ராமகோபாலனிடம் பேசினார். போதிய பாதுகாப்புக்கு உறுதியளித்தார். அதையடுத்து திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைக்க ராமகோபாலன் சென்றார். தண்டையார்பேட்டை: வடசென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே நேற்று காலை விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தயாராக இருந்தனர். அப்போது, இந்து முன்னணியினரின் போஸ்டர் மேல் தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியதால் பிரச்னை ஏற்பட்டது. இந்து முன்னணி வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளால் சாலையில் எழுதினர். ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் மண்டலக்குழு தலைவர் டன்லப் ரவி தலைமையில் வைத்தியநாதன் சாலையில் குவிந்தனர். ராம்விலாஸ் வேதாந்தியின் கொடும்பாவியை விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தின் அருகே போட்டு கொளுத்தினர். பாதி எரிந்த நிலையில் கொடும்பாவியை போலீசார் பறித்துச் சென்றனர். சற்று தொலையில் நின்ற இந்து முன்னணியினர் தி.மு.க.,வினர் மீது செருப்பு, கற்களை வீசினர்.

தி.மு.க.,வினர் பதிலுக்கு செருப்பு, கற்களை வீசியும், அருகே உள்ள கடைகளில் இருந்த பாட்டில்களை தூக்கி வீசினர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக காசிமேடு கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல ஊர்களில் பா.ஜ., இந்து முன்னணியை கண்டித்து தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர்.

நன்றி தினமலர்

1 comment:

தறுதலை said...

அகா... கண்கொள்ளாக் காட்சி. பண்டாரங்கள் அயோத்தியில் அடித்த கூத்தைவிட கொஞ்சம் கம்மிதான். இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.

எனக்கு தனிப்பட்ட முறையில் இதில் சம்மதம் இல்லையென்றாலும், பண்டாரங்கள் சேது கால்வாய் திட்டத்தை எதிர்ப்பதற்கு ராமனை துணைக்கு அழைத்ததால் இதுபோன்ற வண்முறைகள் தவிற்க முடியாததாகிறது.
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.